நீதிமன்றம் உத்தரவிட்டும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும், முக்கிய சாட்சிகள் அனைவரும் உயிர் பயத்தில் இருப்பதாகவும் அஜித்குமார் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான கோயில் பணியாளர் சக்தீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள பத்ர காளியம்மன் கோயிலில் பக்தரின் நகை காணாமல் போனது தொடர்பாக விசாரணை என்ற பெயரில் கோயில் காவலாளி அஜித்குமாரை போலீசார் கொடூரமாக தாக்கினர். இதில், அவர் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதை கோயில் பணியாளர் சக்தீஸ்வரன் வீடியோ எடுத்த நிலையில், அதனை நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பித்துள்ளார். இதனையடுத்து முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சக்தீஸ்வரன், அஜித்குமார் மரணத்தில் முக்கிய சாட்சியான தனக்கும், சில பணியாளர்களின் உயிருக்கும் பெரும் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளார். நீதிமன்றம் உத்தரவிட்டும் முக்கிய சாட்சிகளுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என குற்றம் சாட்டிய அவர், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட தனிப்படை காவலர்களுக்கு ரவுடிகளுடன் பழக்கம் உள்ளதால் முக்கிய சாட்சிகளை மிரட்டுவதாகவும்
குற்றம்சாட்டினார்.