போராட்டக்களமாகும் கிளாம்பாக்கம் - பேருந்துகள் கிடைக்காமல் கொந்தளிக்கும் பயணிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் கடும் அவதியடைந்த பயணிகள், இரவு முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விளம்பர திமுக அரசின் அவசர கதியில் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போராட்டக்களமாக மாறிவரும் அவலம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

போதிய பேருந்துகள் இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளின் காட்சிகள் தான் இவை.

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கடந்த டிசம்பர் 30ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் அவசர கதியில் திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையம் மக்களின் பயன்பாட்டிற்கு வந்த நாள் முதல் இருந்தே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. திமுக அரசின் விளம்பரத்திற்காக திறக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

பேருந்து நிலையத்தில் முறையான தகவல் இல்லை என்றும், போதிய வழிகாட்டுப் பலகைகள் இல்லை என்றும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை அடையாளம் காணமுடியவில்லை எனவும் பயணிகள் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை தை மாத வளர்பிறை முகூர்த்தம் என்பதால் தமிழகம் முழுவதும் அதிக அளவு திருமணங்கள் நடைபெற்றன. இதில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். குறிப்பாக விருத்தாச்சலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளில் அதிக கூட்ட நெரிசல் காணப்பட்டது. போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் முண்டியடித்து கொண்டு ஏறும் நிலை ஏற்பட்டது. 

பெரும்பாலான அரசு பேருந்துகள் முன்பதிவு செய்யப்பட்டதன் காரணமாக மற்ற பயணிகளை ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் பேருந்துகளில் ஏற்றவில்லை என கூறப்படுகிறது. முன்பதிவு இல்லாத சாதாரண பேருந்துகள், போதிய அளவில் இயக்கப்படவில்லை என்று பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். 

சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பல மணி நேரம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தும் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், குழந்தைகள், முதியவர்கள், மாற்று திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் என ஏராளமான பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். 

பல மணி நேரமாக பேருந்திற்காக காத்திருந்த பயணிகள் தங்கள் பொறுமையை இழந்து நள்ளிரவு 2 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போதிய பேருந்துகள் இயக்கப்படாதது குறித்து பயணிகள் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு முறையாக பதிலளிக்காமல் அலட்சியமாக பேசியதால் ஆத்திரமடைந்த பயணிகள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகளுடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பிறகு பயணிகள் சாலை மறியலை கைவிட்டனர். 

போதிய பேருந்துகளை இயக்காமல் போக்குவரத்துக் கழகம் அலட்சியம் காட்டுவதும், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும் தொடர் கதையாகி வரும் நிலையில், சொந்த ஊர்களுக்கு எவ்வித சிரமும் இல்லாமல் பயணிகள் செல்வதற்கு விளம்பர திமுக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Night
Day