பேரூராட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு - தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவு -தலைவர்கள் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பேரூராட்சி அலுவலகத்திலேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க. ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டுவீசி மர்மகும்பல் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவத்திற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ம.க. ஸ்டாலினை கொலை செய்ய முயன்ற கும்பலை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ம.க. ஸ்டாலினுக்கு துப்பாக்கி ஏந்தி போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நாளில் இருந்தே சட்டம் & ஒழுங்குக்கு முடிவுரை எழுதப்பட்டு விட்டதாக கூறியுள்ளார். பேரூராட்சித் தலைவரை அவரது அலுவலகத்திற்குள் புகுந்து குண்டு வீசி படுகொலை செய்யத் துணியும் அளவுக்கு சட்ட ஒழுங்கு சீர்குலைந்திருப்பது கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், இதற்காக ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

பாமக நிர்வாகியைக் கொலை செய்ய முயன்றவர்களை கைது செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டப்பகலில் பேரூராட்சி அலுவலகத்திலேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மாநிலத்தைச் சீர்படுத்த வேண்டிய திமுக அரசு விளம்பரத்தில் ஒரு புறம் மூழ்கியுள்ளது என்றால், மறுபுறம் குற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாறி வேடிக்கை பார்த்து வருகிறது என்றும் மக்களுக்கு சேவை செய்யும் அரசியல் தலைவர்களுக்கே தமிழகத்தில் பாதுகாப்பு வழங்க இயலாத இந்த திமுக ஆட்சிதான் நல்லாட்சியா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Night
Day