சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் முன்னாள் அமைச்சர் பொன்முடி இழிவுபடுத்தி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், புலன் விசாரணை செய்யத் தயங்கினால் வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சைவ வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகம் முழுவதும் 112 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மீது புலன் விசாரணை நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி வேல்முருகன், பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும் போது, அமைச்சராக பதவி வகித்தவர் ஏன் இதுபோன்று பேச வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
அமைச்சராக இருந்தவர் என்ன சொல்கிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார். மேலும், புலன் விசாரணை செய்ய தயக்கம் காட்டினால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என காவல்துறையை நீதிபதி வேல்முருகன் எச்சரித்தார்.