திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே 50-க்கும் மேற்பட்டோருக்கு மர்ம காய்ச்சல் எற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அம்பேத்கர் நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதே பகுதியில் உள்ள 4, 5 வார்டுகளில் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் என 50-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இங்குள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சிதலமடைந்து முறையாக பராமரிக்கப்படாததால் அதிலிருந்து விநியோகிக்கப்படும் சுகாதாரமற்ற குடிநீரை பருகியதே உடல்நல பாதிப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், கழிவுநீர் கால்வாய்கள் முறையாக சுத்தம் செய்யப்படாததால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவியுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
உடனடியாக சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மர்மகாய்ச்சல் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு தேவையான மருத்துவ முகாம்களை அமைத்து பரிசோதிக்க வேண்டும் என்றும் கழிவுநீர் கால்வாய்களை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.