அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சமூக வலைதளங்களில் அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபியிடம் கழக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
புரட்சித்தலைவி அம்மாவுக்கு எல்லாமாக இருந்து கண்ணை இமை காப்பது போல காத்து வந்தவர் தான் புரட்சித்தாய் சின்னம்மா. தனக்கு பிறகும் 100 ஆண்டுகளுக்கு அஇஅதிமுக ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற அம்மாவின் ஆசையை நிறைவேற்ற அயராது உழைத்துக்கொண்டிருப்பவர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள். அப்படிப்பட்டவரை பற்றி எந்த ஒரு தகுதியும், தராதரமும் இல்லாத திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன், அவதூறாக பேசியிருப்பது கோடிக்கணக்கான அஇஅதிமுக தொண்டர்களை கொந்தளிக்க செய்துள்ளது.
இந்நிலையில் குடியாத்தம் குமரன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் கழக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். அஇஅதிமுக மற்றும் புரட்சித்தாய் சின்னம்மா நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் திட்டமிட்டே திமுக பேச்சாளர் குமரன் வீடியோவை பதிவிட்டிருப்பதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவதூறு வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பலரும் குடியாத்தம் குமரனுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் அவதூறு வீடியோவை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கழக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கழக நிர்வாகிகள், விளம்பர திமுக அரசு மீது புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் ஆதாரப்பூர்வமாக சுமத்தி வரும் குற்றச்சாட்டுகளை பொறுத்து கொள்ள முடியாமல் அவர் மீது அவதூறு பரப்பப்படுவதாக குற்றம்சாட்டினர். புரட்சித்தாய் சின்னம்மா மனம் புண்படும் வகையில் குடியாத்தம் குமரன் பேசி வருவதாக வேதனை தெரிவித்த கழக நிர்வாகிகள், சின்னம்மா பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடப்பதாகவும் குற்றம்சாட்டினர். திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது டிஜிபி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கழக நிர்வாகிகள் வலியுறுத்தினர்.