எழுத்தின் அளவு: அ+ அ- அ
பாலாற்றில் தோல் பதனிடும் தொழிற்சாலை கழிவுகள் கலக்கும் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் மரப்பட்டு கிராமத்திற்கு அருகில் உள்ள பாலாற்றில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுகள் வெளியேற்றப்படுவது தொடர்பாக கடந்த 2 வாரங்களுக்கு முன் ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. தோல் பதனிடும் தொழிற்சாலைகள் சட்டவிரோதமாக கழிவு நீரை வெளியேற்றுவதால் நிலத்தடி நீர், பாலாறு, விவசாய நிலங்கள் மற்றும் கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்படுவதையும் தேசிய பசுமை தீர்ப்பாயம் கவனத்தில் எடுத்துள்ளது.
இதுகுறித்து பதில் அளிக்குமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கை சென்னையில் உள்ள தெற்கு மண்டல அமர்வுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் மாற்றியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.