எழுத்தின் அளவு: அ+ அ- அ
பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் செல்போன்களை ஹேக் செய்து சிலர் கண்காணித்து வருவதாக கோட்டக்குப்பம் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் ராமதாஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாமகவில் நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் ஏற்பட்ட மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தனது வீட்டில் தான் அமரும் இடத்திற்கு அருகே ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறிய ராமதாஸ் அதனை அன்புமணி தான் வைத்தார் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இச்சூழலில் ராமதாஸ் வீட்டில் பொருத்தப்பட்ட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களையும் ராமதாஸ் பயன்படுத்தி வரும் தொலைபேசி மற்றும் செல்போன்களையும் ஹேக் செய்து சிலர் கண்காணித்து வருவதாக ராமதாஸ் சார்பில் அவரது நேர்முக உதவியாளர் சாமிநாதன், கோட்டக்குப்பம் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். புகார் மனுவுடன் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படும் வைஃபை மோடம் உள்ளிட்டவைகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.