பாமகவிலிருந்து அன்புமணி நீக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பாமகவின் செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

பாமகவில் கடந்த சில நாட்களாக உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் தற்போது அது உச்சத்தை தொட்டுள்ளது. ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு, அவதூறு கருத்துக்களை பரப்பியது, கட்சிக்கு விரோதமாக செயல்பட்டது உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகளை அன்புமணி மீது முன்வைத்தது. 

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அன்புமணி தரப்பு விளக்கம் அளிக்க 2 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும் பதிலளிக்கவில்லை. இந்நிலையில் இதுதொடர்பாக தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணியை பாமகவின் செயல் தலைவர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக தெரிவித்தார். மேலும் அன்புமணியுடன் பாமகவினர் எந்தவித தொடர்பும் வைக்கக் கூடாது என்றும், அதையும் மீறி தொடர்பு வைத்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமதாஸ் எச்சரித்தார்.

பாமகவின் ஒழுங்கு நடவடிக்கை குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ராமதாஸ்  தெரிவித்தார். தனது பெயருக்கு முன்னால் இன்சியலை மட்டும் அன்புமணி பயன்படுத்தலாம் என்றும் ராமதாஸ் என்ற தனது பெயரை அவர் பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மனம் திருந்தி வரும் அன்புமணியின் ஆதராவளர்களை மன்னித்து ஏற்க தயாராக உள்ளதாகவும் ராமதாஸ் குறிப்பிட்டார். பாமகவில் களை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அன்புமணியிடம் ஏற்கனவே 3 முறை தனிக்கட்சி தொடங்க கூறியதாகவும், வேண்டுமென்றால் அவர் தனிக்கட்சி தொடங்கி கொள்ளலாம் எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


Night
Day