16 குற்றச்சாட்டுகளுக்கு 2வது முறையாக விளக்கம் அளிக்காத அன்புமணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி ராமதாஸ் 2வது முறையாகவும் பதில் அளிக்காததால், அவர் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த மாதம் 17ம் தேதி விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் ராமதாஸ் தலைமையில் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சிக்கும், கட்சியின் நிறுவனர் ராமதாசிற்கும் எதிராக செயல்பட்டு வருவது, சட்டவிரோதமாக தன்னிச்சையாக பொதுக் குழுவை கூட்டியது உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகளை அன்புமணி மீது சுமத்தி அறிக்கை தாக்கல் செய்த ஒழுங்கு நடவடிக்கை குழு, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பரிந்துரை செய்தது. 

இந்த குற்றச்சாட்டுக்களுக்கு கடந்த மாதம் 31ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு அன்புமணி விளக்கம் அளிக்காத நிலையில், செப்டம்பர் 10ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க கோரி 2வது முறையாக அன்புமணிக்கு கடந்த 3ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், 2 முறை நோட்டீஸ் அனுப்பியும் விளக்கம் அளிக்காத அன்புமணியை, கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, பாமக பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக, நிறுவனர் ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்களில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கட்சியின் பொதுச் செயலாளர் முரளி சங்கர் சார்பில் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் மாநில தலைவர் வி.எஸ். கோபு தாக்கல் செய்துள்ள மனுக்களில், தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அன்புமணி தரப்பில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உரிமை கோரியோ, மாம்பழம் சின்னத்தை குறுக்கு வழியில் பெறவோ அணுகினால் தங்கள் தரப்பை விசாரிக்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Night
Day