பச்சை பசேலென மாறிய ராமநாதபுரம்... ஆச்சரியமூட்டும் இரண்டாம் போக சாகுபடி..!

எழுத்தின் அளவு: அ+ அ-

ஒரு போகம் விவசாயத்திற்கே விவசாயிகள் போராடும் ராமநாதபுரம் மாவட்டத்தில், ஆச்சரியமூட்டும் வகையில் இரண்டாம் போகம் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக இரண்டாம் போக நெல் விவசாயம் நடைபெறுவது விவசாயிகளிடையே உத்வேகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது. வறட்சி மாவட்டத்தில் இரண்டாம் போகம் சாத்தியமானது எப்படி? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

வறண்ட மாவட்டம், தண்ணி இல்லா காடு, பனிஷ்மென்ட் ஏரியா என அழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பச்சை பசேலென பச்சை கம்பளம் போர்த்தியது போல காட்சியளிப்பதுதான் அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது. 

நாடு முழுவதும் தகிக்கும் கோடை வெயிலால், மக்கள் அவதிக்குள்ளாகி வருவதுடன் ஏராளமான நீர்நிலைகளும் தொடர்ந்து வறண்டு வருகின்றன. இந்த சூழலில்தான், ஆண்டுதோறும் தண்ணீர் பஞ்சத்தால் அவதியுறும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாம் போகம் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டத்தின் சராசரி மழை அளவு 924 மில்லி மீட்டர். ஆண்டுதோறும் சராசரி மழை அளவை தொடுவதற்கே மிகவும் சிரமப்படும் இம்மாவட்டத்தில் இந்தாண்டு, சராசரி அளவையும் தாண்டி ஆயிரத்து 27 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதால் பெரும்பாலான கண்மாய்கள், குளங்கள் நிரம்பியுள்ளன. 

குறிப்பாக, ஒவ்வொரு முறையும் வைகை அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீர் கடலில் வீணாக கலந்து வந்த நிலையில், இந்த ஆண்டு ஆங்காங்கே உள்ள கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீரை தேக்கி வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் விளைவாக ராமநாதபுரம் பெரிய கண்மாயில் சுமார் 7அடிக்கு தண்ணீர் தேக்கிவைக்கப்பட்டுள்ளது. முதல் போக விவசாயம் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், கண்மாயில் 4 அடி தண்ணீர் மீதம் இருந்துள்ளது. 

இதனை தொடர்ந்து முதல்முறையாக பெரிய கண்மாயை சுற்றியுள்ள கிராமங்களில் குறிப்பாக அச்சுந்தன்வயல் கிராமத்தில் முதல் முறையாக இரண்டாம் போகம் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. குறுகிய கால பயிராக 90 நாட்களில் மகசூல் தரும் கோ 51 என்ற ரக நெல்லை 58 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். தற்போது 30 நாள் பயிராக இருக்கும் நெற்பயிர்கள், இன்னும் 50 முதல் 60 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கடந்த 50 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக ராமநாதபுரம் அருகே இரண்டாம் போகம் நெல் விவசாயம் செய்யப்பட்டிருப்பது ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளிடையே புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.. 

Night
Day