தலைமுறை தலைமுறையாக நீடிக்கும் தண்ணீர் பஞ்சம்... அல்லல்படும் சிவகங்கை மக்கள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை அருகே 3 தலைமுறைகளாக தண்ணீருக்காக போராடி வருவதால் பெரும்பாலான மக்கள் வெளியேறி முதியோர் மட்டுமே வசிக்கும் பகுதியாக மாறியுள்ளது ஓர் கிராமம்... அரசுப் பள்ளி, போக்குவரத்து வசதி, குடிநீர் வசதி என எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாதால் அக்கம் பக்க ஊர்களுக்கு வெளியேறும் மக்களின் அவல நிலையை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு... 

சிவகங்கை மாவட்டம் மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது நாட்டாகுடி என்னும் கிராமம். இக்கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன. இதன் அருகிலேயே இளந்தகுடி, சித்தலூர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் கடந்த மூன்று தலைமுறைகளாக குடிநீர் வசதி கிடைக்காததால் இங்கு வசித்த பெரும்பாலான பொதுமக்கள், குடும்பம் குடும்பமாக வாழ்வாதாரத்தை தேடி வெளியூர்களுக்கு சென்று விட்டனர். 

அரசுபள்ளியும் இல்லை.. வெளியூர் சென்று படிக்க முறையான போக்குவரத்து வசதியும் இல்லை.. தாங்களே சென்று படித்து கொள்ளலாம் என எண்ணினால் கூட சரியான குடிநீர் வசதியும் இல்லை.. எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் சிரமத்திற்கு ஆளான மக்கள், பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி அக்கம்பக்கம் கிராமங்களுக்கும் வெளியூர்களுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர். 

சில ஆண்டுகளுக்கு முன் அரசு சார்பில் உயரகோபுர நீர் தேக்க தொட்டியும், சுத்திகரிப்பு நிலையமும் அமைத்து கொடுக்கப்பட்ட நிலையில், முறையான பராமரிப்பு இல்லாமல் அவைகள் பழுதாகின. பிரதம மந்திரியின் ஜல் ஜீவன் திட்டத்தின் படி, வீட்டிற்கு வீடு தண்ணீர் குழாய் மட்டும் பதித்து கொடுத்த அதிகாரிகள் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யவில்லை. இதனால் அக்கிராமத்தில் வசிக்கும் மக்கள், உப்பாற்றுற்கு தண்ணீர் தேடி சுமார் 3 கிலோ மீட்டர் நடைபயணமாக சென்று, ஊத்து தோண்டி தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக காலை, மாலை என இருவேளைகளிலும் ஒரு குட தண்ணீருக்காக ஒரு மணி காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

பாதுகாப்பற்ற சூழலில் உள்ள நாட்டாகுடியின் பெயரை கேட்டாலே அப்பகுதிக்கு இளைஞர்களுக்கு திருமணத்திற்கு பெண் தர மறுப்பதாகவும், என்னதான் பொய்களை கூறி திருமணம் செய்து வைத்தாலும் இந்த பகுதியை பார்த்த பின் பெண்கள் இந்த ஊரில் வாழ மறுப்பதாகவும் வேதனை தெரிவித்தனர். அடிப்படை இல்லாத ஊரின் அவலநிலையை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி, பலமுறை கோரிக்கை விடுத்தும் கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

3 தலைமுறைகள் தாண்டியும் கூட தண்ணீர் பஞ்சம் நீடிப்பதால் முதியோர் இல்லமாக மாறிய கிராமத்தில் வசிக்கும் மக்கள், தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர்வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அரசின் பார்வைக்காக காத்திருக்கும் மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது.

Night
Day