எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிவாசல்களில் ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
பக்ரீத் பண்டிகை நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி அலுவலகம் அறிவித்திருந்த நிலையில், பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்கு ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்த நிலையில், ஒரு பிரிவு
இஸ்லாமியர்கள் இன்றைய தினமே பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி, மதுரை மாவட்ட ஜாக் (JAQH) அமைப்பின் சார்பில் தமுக்கம் மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். பின்னா் ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். உலக நன்மை வேண்டி சிறப்பு துவா செய்ததுடன், ஆட்டிறைச்சியை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி தியாகத்திருநாள் கடமையை நிறைவேற்றினர்.
இதே போன்று தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியில் உள்ள முஸ்தபா நடுநிலைப்பள்ளி மைதானத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி சிறப்பு கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து, தங்களது உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு மாமிச விருந்தளித்து பக்ரீத் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தில் உள்ள மஜித் ரஹ்மான் தவ்ஹீத் ஜமாத் தொழுகை திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு உலகம் முழுவதும் அன்பு, சகோதரத்துவம் உலக அமைதி வேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதுடன், ஆடுகளை பலியிட்டு குருபானி வழங்கினர். இதில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு தர்மம் செய்தனர்.