எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருவாரூர் மாவட்டத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 500 மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனர். தற்போது பயிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக உள்ளதால் அறுவடை இயந்திரம் மூலமாக குறுவை நெல் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. கடந்த 15 நாட்களுக்கு முன்பு அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகள் மற்றும் அரவை ஆலைகளுக்கு அனுப்பப்படாததால் கோட்டூர், மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. தற்போது கொள்முதல் நிலையங்களில் சாக்கு பற்றாக்குறையால் கொள்முதல் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க முடியாமல் திணறி வருகின்றனர். நெல்மணிகளை சாலையில் கொட்டி தார்பாய் போட்டு மூடி வைத்து காத்துக் கிடக்கின்றனர். அவ்வப்போது மழை பெய்து நெல்மணிகள் தண்ணீரில் நனைந்து வீணாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விவசாயிகளை தனியார் நெல் வியாபாரிகள் பக்கம் திசை திருப்புவதற்காகவே விளம்பர திமுக அரசு வேண்டுமென்றே நெல்மணிகளை கொள்முதல் செய்யாமல் தங்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை தேக்கம் இல்லாமல் கொள்முதல் நிலையங்களில் இருந்து சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 500 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.