எழுத்தின் அளவு: அ+ அ- அ
அடிதடி வழக்கில் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ், நீதிமன்ற உத்தரவின் பேரில் நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் பூசிவாக்கத்தைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் அதே பகுதியில் உள்ள பேக்கரி தரப்பினருக்கும் இடையே கடந்த மாதம் அடிதடி ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட முருகன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் ஒரு மாதம் கடந்தும் புகார் மீது காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தில் முருகன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய டிஎஸ்பி சங்கர் கணேஷ், வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியது தெரியவந்தது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செம்மல், டிஎஸ்பி சங்கர் கணேஷை உடனடியாகக் கைது செய்து வரும் 22-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து டிஎஸ்பி சங்கர் கணேஷ் நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சங்கர் கணேசை, ஏற்கனவே மருத்துவ பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.