நீட் தேர்வுக்கு ஏழ்மை தடையல்ல... சாதித்து காட்டிய மாணவி..

எழுத்தின் அளவு: அ+ அ-

அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெற்று எம்.பி.பி.எஸ் படிக்க தேர்வாகி இருக்கும் ஏழைத்தாயின் மகளுக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. தந்தை இறந்தபோதிலும் தாய், தாத்தா, பாட்டி ஆகியோரின் முயற்சி மற்றும் ஊக்குவிப்பால் நீட் தேர்வில் சாதித்து காட்டிய மாணவியின் பயணத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

நீட் என்ற எட்டா கனியை, ஒரு சிலரே எட்டிப்பறிக்கின்றனர். அப்படி எட்டிப்பறிக்க முயலும் மாணவர்களுக்கு முன்னுதாரமாக மாறி உள்ளார் விருதுநகர் மாவட்டம் புலிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பூமாரி என்ற அந்த மாணவி... 

தந்தை முத்துபாண்டி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், குடும்பத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்ற நோக்கில் இரவு பகல் பாராமல் படித்து வந்தார் பூமாரி. அவருக்கு உறுதுணையாக தாய் பொன்னழகு, தாத்தா, பாட்டி ஆகியோர்  விறகு வெட்டியும், ஆடு மேய்த்தும் உதவி செய்து உறுதுணையாக கை கொடுத்துள்ளனர். குடும்பத்தின் நிலையை மனதில் வைத்துக்கொண்டு தீவிரமாக படித்த மாணவி, 2023ம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 573 மதிப்பெண்கள் பெற்று அசத்தினார். 

லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டும் ஐடி துறைகளை தேர்ந்தெடுக்காமல், ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக மருத்துவத்துறையை தேர்ந்தெடுத்துள்ளார் மாணவி பூமாரி... அதற்காக வீட்டிலிருந்தே நீட் தேர்வுக்கு தயாரான மாணவி, பன்னிரெண்டாம் வகுப்பு  ரிசல்ட் வந்த கையுடன் நீட் தேர்வு எழுதினார் ... ஆனால், முதல் முயற்சியில் 273 மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்தார் பூமாரி... இதனால், தனியார் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்ட மாணவிக்கு, ஆடுகளை விற்றும், விறகு வெட்டியும், நகைகளை அடகு வைத்தும், மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் பெற்றும் படிக்க வைத்துள்ளனர் அவரின் குடும்பத்தினர்...

தொடர்ந்து 2024ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் 477 மதிப்பெண் பெற்று, பல் மருத்துவ படிப்புக்கான வாய்ப்பு கிடைத்தபோதிலும்  எம்பிபிஎஸ் படித்து ஏழை குடும்பங்களுக்கு மருத்துவம் பார்ப்பது என்ற தனது லட்சியத்தில் விடாப்பிடியாக இருந்துள்ளார் மாணவி பூமாரி...

நீட் தேர்வில் மகள் வெற்றி பெற்று விடுவாள் என்ற நம்பிக்கையாலும், மகளின் கனவை நினைவாக்க வேண்டும் என்ற நோக்கத்தாலும் பலரிடம் 2 லட்சம் ரூபாய் வரை கடனாக பெற்று சேலத்தில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் பூமாரியை சேர்த்துள்ளனர் அவரின் குடும்பத்தினர்...

முயற்சி திருவினையாக்கும் என்ற வரிகளுக்கு ஏற்ப இந்தாண்டு நடந்த நீட் தேர்வில் 436 மதிப்பெண் பெற்று மருத்துவ படிப்பிற்கு தேர்வாகினார் மாணவி பூமாரி... இதுமட்டுமின்றி சென்னை வண்டலூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியிலும் சீட் கிடைத்ததால் மாணவி பூமாரி மட்டுமின்றி அவரின் குடும்பமே மகிழ்ச்சியின் உச்சத்தில் துள்ளி குதிக்கிறது. 

நீட் தேர்வில் பெற்றி பெற்றது குறித்தும், தனியார் கல்லூரியில் சீட் கிடைத்தது குறித்து உணர்ச்சி பொங்க பேட்டியளித்த மாணவி, தன்னை போன்று கிராமப் புறங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சேவை செய்வதே தனது லட்சியம் என கூறினார்.

மகளின் வெற்றிப்பயணம் குறித்து தாய் பொன்னழகு கூறுகையில், மகளுக்கு மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

இருப்பினும், மருத்துவ படிப்பிற்கான செலவு மற்றும் ஏனைய செலவுகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற கவலையுடனும் இருந்து வரும் குடும்பத்துக்கு உதவும் விதமாக மாணவியின் மருத்துவ படிப்புக்கான அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day