எழுத்தின் அளவு: அ+ அ- அ
சீமான் மற்றும் விஜயலட்சுமி இருவரும் ஒருவருக்கொருவர் அளித்துள்ள புகாரை திரும்ப பெறுவதோடு, மன்னிப்பு கோரிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி நாகரத்தினம், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.
சீமான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கடந்தமுறை செப்டம்பர் 12ஆம் தேதி நீதிமன்றம் கூறியது போல மன்னிப்பு தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த பிரச்சனையை முடிவுக்கு வரவேண்டும் என விரும்புவதாகவும் வாதிட்டார்.
அதற்கு நீங்கள் தாக்கல் செய்துள்ள மன்னிப்பு கூறிய பிரமாண பத்திரம் திருப்திகரமாக இல்லை என்றும் நீங்கள் கூறியுள்ள அந்த மன்னிப்பு தோரணை சரியானதாக இல்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து சீமான் தரப்பு, எதிர்தரப்பு மனுதாரரான விஜயலட்சுமியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
அதற்கு சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறுகிறோம் ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என விஜயலட்சுமி தரப்பினர் தெரிவித்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சீமான் - விஜயலட்சுமி தரப்பினர் அனைத்து புகார்களையும் திரும்ப பெற உத்தரவிட்டதோடு, அனைத்து புகார்களை திரும்ப பெற்றதையும் மன்னிப்பு கோரியதையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதேவேளையில் இதுதொடர்பாக சீமானும், விஜயலட்சுமியும் பேட்டியோ, காணொளியோ வெளியிடக் கூடாது என உத்தரவிட்டதோடு, எந்த ஊடகங்களிலும் பேசக்கூடாது எனவும் அறிவுறுத்தினர். மேலும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சீமான், விஜயலட்சுமிக்கு நீதிபதிகள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.