நாடாளுமன்றத் தேர்தல் : தமிழகத்தில் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டார அங்கன்வாடி பணியாளர்கள், வாக்களிக்க வேண்டியன் அவசியம் குறித்து எலவனாசூர்கோட்டை ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் விளக்கு ஏற்றி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி அகல் விளக்கேற்றி பக்தர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

திருச்சியில் அனைத்து வாக்காளர்களும் தவறாது தங்களது ஜனநாயக கடமையினை செலுத்தி 100 சதவீத வாக்களிப்பை உறுதிசெய்ய வேண்டி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த மாரத்தான் ஓட்டத்தை ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அண்ணாநகர் சாலையிலிருந்து அண்ணா விளையாட்டரங்கம் வரை 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

புதுக்கோட்டையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியை மாவட்ட விளையாட்டு திடலில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தொடங்கி வைத்தார். புதிய பேருந்து நிலையம் வழியாக சென்ற இந்த மாரத்தான் பந்தயம், மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கை வந்தடைந்தது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. புதிய பேருந்து நிலையத்தில் வட்டாட்சியர் இளங்கோவன் தலைமையில் மேளதாளத்துடன் தொடங்கிய இந்த பேரணியில் தனியார் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திபடி பங்கேற்றனர். இப்பேரணியின் போது, வணிகர்கள் மற்றும் பேருந்து பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்பதை உணர்த்தும் விதமாக, ராமநாதபுரத்தில் துணை ராணுவத்தினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில், ஆயுதப்படை போலீசார், போக்குவரத்துத்துறை காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினரும் கலந்து கொண்டனர். புதிய பேருந்து நிலைய பகுதியில் தொடங்கிய இந்த கொடி அணிவகுப்பு, சக்கரக்கோட்டை வழியாக ஆட்சியர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது. 

Night
Day