எழுத்தின் அளவு: அ+ அ- அ
தூய்மை பணிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து மதுரையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 3வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூய்மைப் பணியை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை மாநகாராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் 10 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனையடுத்து போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, பொது இடத்தில் போராட்டம் நடத்தககூடாது எனக் கூறி தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அமைதி வழியில் போராடியவர்களை அராஜக போக்கில் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், மதுரையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் 3வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தாமல் மாநகராட்சி அதிகாரிகள் ஏமாற்றியதாகவும், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால், மாற்று தொழிலாளர்களை நிரந்தரமாக நியமிக்கப்போவதாக OURLAND ஒப்பந்த நிறுவனம் மிரட்டல் விடுக்கும் வகையில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாகவும் தூய்மைப் பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
போராட்டத்தின்போது, தங்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் குறுஞ்செய்தி அனுப்பிய தனியார் ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்தும், கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத விளம்பர திமுக அரசுக்கு எதிராகவும் தூய்மைப் பணியாளர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் தேங்கி வீசுவதுடன், நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர்.