தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

துணியை துவைத்து வெளுத்து மனிதனை மிடுக்காக வாழ வழிவகுக்கும் சலவைத் தொழிலாளர்கள் வாழ்க்கை, இன்று பரிதாப நிலையில் உள்ளது. திரூவாரூரில் அவர்களுடைய தொழிலுக்கு ஆதாரமாக உள்ள ஓடம்பேக்கி ஆறு,  ஆகாயதாமரை செடி கொடிகள் படர்ந்து, ஆறு என்ற சுவடே தெரியாத அளவிற்கு காணப்படுகிறது. மாசடைந்து கிடக்கும் ஆறால் பாதிக்கப்பட்டுள்ள  சலவைத் தொழிலாளர்களின் அவலநிலையை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு ...

ஆள் பாதி, ஆடை பாதி என்பது பழமொழி. ஒரு மனிதரின் தோற்றத்தில் பாதியை அவர் அணியும் ஆடை எடுத்துச் சொல்கிறது. இதற்கு ஏற்ப மனிதர்களை இந்த சமுதாயத்திற்கு மிடுக்காக வைத்திருப்பதில் சலவைத் தொழிலாளர்களின் பங்கும் முக்கியமானதாக உள்ளது.  அடி மேல் அடிவாங்கித் தேய்ந்துகிடக்கும் சலவைக்கல்போல, துயருற்றுக்கிடக்கிறது திருவாருர் பகுதி சலவைத் தொழிலாளர்கள் நிலை. 

திருவாரூர் நெய்விளக்குதோப்பு தெருவில் ஓடம்போக்கி ஆற்றங்கரையோரம் வசித்து வருகின்றனர் நூற்றுக்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர் குடும்பங்கள். இவர்கள்,  அழுக்கை அகற்ற வெள்ளாவியில் வேகவைத்து துணிகளை வெளுத்த பின்னர் ஓடம்போக்கி ஆற்று நீரில் துவைத்து எடுத்து ஜவ்வரிசி கஞ்சியில் நனைத்து எடுத்து உலரவைத்து பின்னர் லாண்டரி கடைகளுக்கு அனுப்பிவைக்கின்றனர்.

சலவைத் தொழிலாளர்களின் தொழிலுக்கு முக்கிய நீர் ஆதரமாக இருந்துவரும் திருவாரூர் ஓடம்போக்கி ஆறு, ஆகாயதாமரை செடி கொடிகள் படர்ந்து ஆறு என்ற சுவடே தெரியாத அளவிற்கு காணப்படுகிறது. 

குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டுமே ஆற்றில் தண்ணீர் வருவதால், ஆற்றங்கரையில் சிறு சிறு சிமிண்ட் தொட்டிகளை கட்டி அதன் அருகே போர்வெல் அமைத்து நீர் இறைத்து துணிகளை துவைத்து தங்களது தொழிலை மேற்கொண்டு வருகின்றனர் சலவைத் தொழிலாளர்கள். இருப்பினும் போர்வெல் மூலம் நிலைமையை ஒரளவு சரிசெய்து கொள்ளலாம்  என்று நினைத்தால், அதற்கும் தடையாக வந்து நிற்கிறது பாழாய் போன மின்வெட்டு. அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு  சவால் நிறைந்த வாழ்க்கையாக மாறியுள்ளது சலவை தொழிலாளர்களின் வாழ்க்கை.

இதுதவிர,  திருவாரூர் நகரில் உள்ள குடியிருப்புகள், மருத்துவமனைகள், விடுதிகள், திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீரும், செப்டிக் டேங்  வெளியேறும் மலக்கழிவுநீரும் ஓடம் போக்கி ஆற்றில் கலப்பதால் சலவைத்தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாசடைந்த ஓடம்போக்கி ஆற்றின் நீரால் பல்வேறு சருமநோய்களுக்கு உள்ளாகி அவதியுற்று வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் தொடங்கி திருவாரூர் நகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் என பலத்தரப்பட்ட அரசு அதிகாரிகளிடம் புகார் மனு வழங்கியும் இதுவரை எந்தவித தீர்வும் காணப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர் சலவைத் தொழிலாளர்கள். எனவே, உடனடியாக ஓடம்போக்கி ஆற்றினை தூர்வாரியும், திருவாரூர் நகர் பகுதிகளில் இருந்து ஆற்றில் கலந்துவரும் கழிவுநீர், மலக்கழிவுநீரை தடுத்து நிறுத்தவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் மழைக்காலங்களில் அழுக்கு துணிகளை துவைத்து உலரவைக்க முடியாததால் இக்கால கட்டத்தில் வேலை வாய்ப்பு இன்றி அவர்கள் தவித்து வருகின்றனர்.  எனவே, மீனவ சமுதாய குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்குவதை போன்று தங்களுக்கும் மழைக்கால நிவாரணம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர் சலவைத் தொழிலாளர்கள். 

இலவச மின்சாரம் வழங்கவேண்டும், கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை, இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்டவையும் அவர்களுடைய கோரிக்கையாக உள்ளது. அவலநிலையில் உள்ள தங்கள் வாழ்வில் ஒளியேற்ற,  திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றை தூர்வாரி, ஆற்று தண்ணீர் மாசுபடுவதை தடுக்க அரசு முன்வர வேண்டும் என்பதே சலவைத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.  
 

Night
Day