தூத்துக்குடியில் ரூ.17,400 கோடி மதிப்பு திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் 17 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் ... மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் ஆளும் திமுக அரசால் மறைக்கப்படுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடி, தூத்துக்குடியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

265 கோடி மதிப்பிலான நிலக்கரி தளத்தை இயந்திர மயமாக்கும் திட்டம், 124 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், 4 ஆயிரத்து 586 கோடி ரூபாயில் தேசிய நெடுஞ்சாலைகள் பணிகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

குறிப்பாக 950 கோடி ரூபாய் மதிப்பிலான வரலாற்று சிறப்பு மிக்க குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின் பேசிய பிரதமர் மோடி, தூத்துக்குடி மாவட்டம் நாட்டின் வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள 17 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்ற பிரதமர் மோடி, இத்திட்டங்கள் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் என்றார்.

4 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்கள் நிறைவேறும் போது, சாலை வழி இணைப்புகள் சிறப்பாக மாறி, பயண நேரம் வெகுவாக குறையும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இப்படி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசால் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் குறித்த செய்திகளை செய்தித்தாள்களில் வெளியிட தமிழக அரசு அனுமதிப்பதில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

எத்தனை தடைகள் வந்தாலும், தமிழ்நாட்டுக்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியே தீருவோம் என பிரதமர் மோடி சூளுரைத்தார்.

Night
Day