எழுத்தின் அளவு: அ+ அ- அ
தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளதால் சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பண்டிகை காலம் என்றாலே ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். வெளியூர் பயணம் அதிகரிப்பதால், இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாகவும் பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
சென்னையில் இருந்து நெல்லைக்கு சாதாரண நாட்களில் 800 ரூபாய் முதல் ஆயிரத்து 200 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது 2 ஆயிரத்து 500 முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மதுரைக்கு குறைந்தபட்சம் 2 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும், திருச்சி, நாகர்கோவில், கன்னியாகுமரி, சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் ஆம்னி பேருந்துகளில் கட்டணங்கள் அதிரடியாக பல மடங்கு உயர்த்தப்பட்டு, கட்டண கொள்ளை நடப்பதாகவும் பயணிகள் புகார் கூறுகின்றனர். கட்டண உயர்வு இருந்தால் கடும் நடவடிக்கை என வழக்கமான வெற்று அறிவிப்பை தெரிவிக்காமல், வெளிப்படையாக கட்டண கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது விளம்பர திமுக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.