திமுகவின் கனிமவள கொள்ளை... ரூ.700 கோடி ஊழல்.., அம்பலப்படுத்திய அறப்போர் இயக்கம்...

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லையில் நடைபெற்ற கனிம வள கொள்ளை தொடர்பாக அறப்போர் இயக்கம் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளது. மிகப்பெரிய ஊழலை செய்து அரசுக்கு 700 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன், சபாநாயகர் அப்பாவு மற்றும் ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ். ஆகியோருக்கு எதிராக தமிழக முதலமைச்சர் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்தி உள்ளது...

2022 ஆண்டு மே மாதம் நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் என்னும் இடத்தில் சங்கரநாராயணன் என்பவருக்கு சொந்தமான கல் குவாரியில் நிகழ்ந்த விபத்தில் நான்கு பேர் பலியாகினர். அப்போதுதான் சட்டவிரோதமாக விதிகளை மீறி மிகப்பெரிய அளவில் குவாரியில் பாறைகள் வெட்டி தகர்க்கப்படும் விவகாரம் அம்பலமானது...

இதையடுத்து அப்போதைய புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனராக இருந்த நிர்மல்ராஜ் IAS, பல்வேறு மாவட்ட அதிகாரிகளைக் கொண்டு ஆய்வுக் குழு அமைத்தார். அனைத்து குவாரிகளில் நிகழ்ந்த விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்ய அக்குழுவுக்கு நிர்மல் ராஜ் ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டார்...

ஆய்வுக்குழுவினரும் நெல்லை மாவட்டத்தில் உள்ள 54 குவாரிகளிலும் ஆய்வு செய்து 53 குவாரிகளில் சட்ட விரோதமாக கனிம வளக்கொள்ளை நடப்பதாக அறிக்கை அளித்தனர்...

அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அனைத்து குவாரிகளையும் மூட உத்தரவிட்டார். இந்நிலையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனராக இருந்த நிர்மல்ராஜ் IAS-ஐ மாற்றிவிட்டு, ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ். அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்...

அதன் பின்னர் ஜூலை 2022-ல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குவாரி மூடப்பட்டது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் எம்.பி. ஞான திரவியம், ஆட்சியர் விஷ்ணுவுக்கு அழுத்தம் கொடுத்ததை அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்தியுள்ளது...

இந்த கனிம வளக்கொள்ளை குறித்த அறிக்கையை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அறப்போர் இயக்கம் பெற்றது. அதில் அனுமதி கொடுக்கப்பட்ட அளவை விட, ஒவ்வொரு குவாரியும் எத்தனை கன மீட்டர் அதிகமான கற்கள் மற்றும் கிராவல் வெட்டி எடுத்தார்கள் என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன...

விதிமீறல்களில் ஈடுபட்ட குவாரிகளுக்கு துணை ஆட்சியர்கள் போட்ட அபராதங்களும் கிடைக்கப்பெற்றன. அதன்படி, 24 குவாரிகளில் மட்டுமே கிட்டத்தட்ட 50 லட்சம் கன மீட்டருக்கும் மேலான கற்கள் மற்றும் கிட்டத்தட்ட 5.5 லட்சம் கன மீட்டருக்கும் மேலான கிராவல் சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது...

10 லட்சம் கனமீட்டருக்கு கற்களை வெட்டி எடுக்கலாம் என அனுமதி அளித்துள்ள நிலையில் 38 லட்சம் கனமீட்டருக்கு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது ஊர்ஜிதமாகி உள்ளதாக அறப்போர் இயக்கம் கூறியுள்ளது...

1 கோடி கனமீட்டருக்கு மேலாக கற்கள் மற்றும் கிராவல் சட்டவிரோதமாக சுரண்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அறப்போர் இயக்கம், நெல்லை இருந்து கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக புகார் தெரிவித்துள்ளது...

இந்நிலையில் சார் ஆட்சியர்கள் 26 உத்தரவுகளின் மீது ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்வதற்கு பதில், ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ்சிடம், குவாரி தரப்பினர் மேல்முறையீடு செய்ததாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது...

குவாரி உரிமையாளர்களின் மேல்முறையீட்டு மனுவை சம்மந்தமே இல்லாத விதியை பயன்படுத்தி ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ். விசாரித்து, ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான குவாரிக்கு 20 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை ரத்து செய்து, சட்ட விரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவில்லை எனக்கூறி 75 லட்ச ரூபாய் அபராதம் விதித்து, தவணை முறையில் செலுத்த உத்தரவிட்டதாக அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்...

இப்படி சொற்ப அபராதத்தை விதித்து மூடப்பட்ட குவாரிகள் அனைத்தையும் சட்டவிரோதமாக ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ். மீண்டும் செயல்பட அனுமதித்துள்ளார்...

262 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அதை 13 கோடியாக குறைத்து அரசுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியதாக ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ். மீது ஜெயராம் வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்...

இந்த குவாரிகளை எல்லாம் திமுகவின் எம்.பி. ஞானதிரவியம், நெல்லை கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் கிரஹாம்பெல் உள்ளிட்டோர் நடத்தி வருவதாகவும் ஜெயராம் வெங்கடேசன் புகார் தெரிவித்துள்ளார்... 

இப்படி கொள்ளை அடிப்பதற்கு பதில் நெல்லை மாவட்டத்தை கேரளாவிற்கு மொத்தமாக கொடுத்து விடலாம் என கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார் அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன்...

கடந்த காலங்களில் லஞ்சம் தொடர்பாக புகார்கள் இருந்தால் உடனடியாக தெரிவியுங்கள் என அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் கூறியிருந்தார். அப்படி கூறிய ஸ்டாலின் தற்போது முதல்வராகியுள்ள நிலையில் மிகப்பெரிய ஊழலை செய்து அரசுக்கு 700 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜெயராம் வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பான 600 பக்க ஆவணங்களை விசாரணை அமைப்பிடம் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்...

மொத்தத்தில் நெல்லை மாவட்டத்தையே சூறையாடி வரும் ஞானதிரவியம் எம்.பி., கிராஹம்பெல் உள்ளிட்டோர் மீதும், அவர்களுக்கு துணை போன கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் மீதும், சட்டவிரோதமாக செயல்பட்ட ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ். மீதும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடவேண்டும் என ஜெயராம் வெங்டேசன் வலியுறுத்தி உள்ளார்...

Night
Day