திடீரென ஒலித்த 'ரத்தக்கொதிப்பு" பாடல் - பத்திரிகையாளர் சந்திப்பில் டென்ஷனான சீமான்

எழுத்தின் அளவு: அ+ அ-

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை மற்றும் சின்னம் குறித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சீமான் திடீரென ஆவேசமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எதற்காக அவர் பேச்சை நிறுத்திவிட்டு, ஆவேசம்அடைந்தார், நிர்வாகிகளை கடிந்து கொண்டது ஏன், இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக 40 தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் 20 ஆண் வேட்பாளர்களும், 20 பெண் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு இந்த முறை மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையும், மைக் சின்னம் குறித்த அறிவிப்பும் வெளியிடுவதற்காக சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று, தேர்தலில் அறிக்கையை வெளியிட்டு மைக் சின்னத்தை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார்.

அப்போது, தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டியிடப் போவதாகவும், வேறு சின்னங்கள் கேட்டு கிடைக்காதால் தற்போது மைக் சின்னத்தை விட சிறந்த சின்னம் இல்லாததால் மைக் சின்னத்தில் போட்டியிட முடிவெடுத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

அப்போது திடீரென அவருக்கு பின்னால் நின்றிருந்த நிர்வாகியின் செல்போனில் "ரத்த கொதிப்பு ரத்த கொதிப்பு" என பாடல் ஒலிக்க தொடங்கியது.  தொடர்ந்து வேறொரு நிர்வாகியின் செல்போனும் ஒலிக்க தொடங்கியவுடன் ஆவேசமடைந்த சீமான், சிறிது நேரம் பேச்சை நிறுத்திவிட்டு, பின்னால் திரும்பி நிர்வாகிகளை கண்டித்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து சில நிமிடங்களுக்கு பின்னர் பேச்சை தொடர்ந்த சீமான், யார் வேண்டுமானாலும் அவரவர்கள் சின்னத்திற்கு வாக்கு கேட்கலாம், ஆனால் தங்கள் சின்னமான மைக் இல்லாமல் யாராலும் வாக்கு கேட்க முடியாது என தெரிவித்தார்.

விவசாயி சின்னத்தையும் நான் கேட்கவில்லை, மைக் சின்னத்தையும் நான் கேட்கவில்லை, தேர்தல் ஆணையம் தான் கொடுத்தது என்னைவிட எனக்கு எது சரி என்று தேர்தல் ஆணையத்திற்கு தெரிந்துள்ளதாக சீமான் தெரிவித்தார்.

varient
Night
Day