ஒரே தொகுதிக்கு 2 வேட்பாளர்கள்... காங்கிரஸில் வெடித்த கோஷ்டி பூசல்...

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவருக்கு போட்டியாக முன்னாள் எம்.பி. ராமசுப்பு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நெல்லையில் காங்கிரஸ் கட்சியினரிடையே வெடித்துள்ள கோஷ்டி பூசல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், இந்தியா கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு, 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நீண்ட இழுபறிக்கு பின் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

அதன்படி நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு, காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக ராபர்ட் ப்ரூஸ் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவருக்கு போட்டியாக காங்கிரஸை சேர்ந்த முன்னாள் எம்பி ராமசுப்பு வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால் கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளித்த ராபர்ட் ப்ரூஸ், இந்தியா கூட்டணி சார்பில் தாம் மட்டுமே காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளதாகவும், வேறு எந்த வேட்பாளரையும் தமக்கு தெரியாது என குறிப்பிட்டார்.

இந்தநிலையில்தான் அவருக்கு போட்டியாக, முன்னாள் எம்.பி. ராமசுப்பு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கட்சிக்கு களங்கம் விளைவிக்காமலும், கூட்டணிக்கு கூந்தகம் விளைவிக்காமலும், செயல்படுவேன் என தெரிவித்தார்.

இதனிடையே காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸூக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் அமைச்சர் சிதம்பரத்தின் ஆதரவாளரான வானமாமலையும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 18ம் நெம்பர் டோக்கன் பெற்று கொண்டு வெகு நேரம் காத்திருந்தார். ஆனால் அவரது டோக்கன் எண்ணை அழைக்காமல் அடுத்த எண்ணை மாவட்ட ஆட்சியர் அழைத்து காலதாமதம் செய்ததாக ஆட்சியருடன் வானமாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் வானமாமலையால் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய முடியாமல் போனது. ஒரே தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் 2 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ள சம்பவத்தில் இருந்து கோஷ்டி பூசல் வெடித்துள்ளது அம்பலமாகியுள்ளது.

Night
Day