எழுத்தின் அளவு: அ+ அ- அ
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 83.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளர் எல்.கே.சுதீஷின் தாயார் அம்சவேணி வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவரது உடல் விருகம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ளம் தேடி, இல்லம் நாடி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளர்களை சந்திக்கவிருந்த நிலையில், தாயாரின் இறப்பு செய்தியை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார். விருகம்பாக்கம் இல்லத்திற்கு வருகை தந்த பிரேம லதா விஜயகாந்த், தாயாரின் உடலை கண்டு கதறி அழுதது காண்போரை கலங்க செய்தது.
பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணியின் உடலுக்கு அவரது பேரன்கள் விஜயபிரபாகரன், சண்முகபாண்டின் ஆகியோரும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் உள்ளிட்டோரின் அஞ்சலியை தொடர்ந்து அம்சவேணி அவர்களின் இறுதி ஊர்வலம் விருகம்பாக்கம் இல்லத்தில் இருந்து நாளை மதியம் 1 மணி அளவில் தொடங்கும் என்றும் வடபழனி ஏவிஎம் மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுவதாகவும் தேமுதிக-வின் தலைமைக் கழக அலுவலகம் தெரிவித்துள்ளது