தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பூஜைக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர். ஒரு சில இடங்களில் விநாயகர் சிலைகள்  பிரதிஷ்டை செய்யப்பட்டு கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
 
 விநாயகர் தென்காசியில் பூஜைக்கு தேவைப்படும் பூக்கள், காய்கறிகள், வாழைப்பழம், வாழை இலை, பொறி, கடலை, அவல், சம்பா அவல் உள்ளிட்ட பொருட்களையும், கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்களையும் தற்போது முதலே பொதுமக்கள் வாங்கி வருகின்றனர். பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க குவியும் பொதுமக்களால் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே காசி விஸ்வநாதர் ஆலயம் முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலை முன்பு மஞ்சள், மாவு, களிமண், உள்ளிட்ட பொருட்ளை வைத்து பொதுமக்கள் தங்கள் கைகளால் செய்த பல்வேறு வடிவ விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். 

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்திக்காக பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது. தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பூஜைக்கான பொருட்களை வாங்க குவிந்த வண்ணம் உள்ளனர். வாழை இலை, பழ வகைகள்,  வண்ண வண்ண குடைகள், அலங்காரப் பொருட்கள், பூஜை பொருட்கள் ஆகியவற்றை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.  ஒரே நேரத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் தாம்பரம் மார்க்கெட் பகுதியில் பகுவிந்துள்ளதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்டம் நெரிசல் ஏற்படும் இடங்களில் தாம்பரம் காவல் துறையினர் போலீசார் சென்று மக்களை முறைப்படுத்தி வருகின்றனர்.

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் விநாயகர் சிலைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வட மாநிலங்களில் இருந்து வந்துள்ள தொழிலாளர்களும் சிற்பக் கலைஞர்களும் ஐந்து அடி முதல் 20 அடி உயரம் வரையிலான பல்வேறு வடிவ விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர். மதுரை மாநகர், புறநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்தை இளைஞர்களும் பல்வேறு அமைப்பினரும் விநாயகர் சிலைகளை வாங்கி பூஜை செய்து வாகனங்களில் ஏற்றிச் செல்கின்றனர். 

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பாலக்கரையில் 12 அடி உயரத்தில் இரண்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கும்பகோணம் அபிநயா நாட்டியப் பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம் நடைபெற்றது. விநாயகரைப் போற்றும் பாடலுக்கு மாணவிகள் ஆடிய பரத நாட்டியத்தை பக்தர்களும் பொதுமக்களும் பார்த்து ரசித்தனர்.

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் வெகுவிமரிசையாக  நடைபெற்றது. சதுர்த்தி விழா கடந்த 18ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஒன்பதாவது நாள் திருவிழாவான தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் காட்சியளிக்கும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய கற்பக விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் சண்டிகேஸ்வரர் தேரையும், விநாயகர் தேரையும் இழுத்தனர்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நாடு முழுவதும் களை கட்டியுள்ள நிலையில் புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்கள் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் 5 அடி உயரமுள்ள காகித விநாயகர் சிலையை உருவாக்கி அசத்தியுள்ளனர். புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு பள்ளி மாணவர்கள் 4 பேர் நுண்கலை ஆசிரியர் கிருஷ்ணனுடன் சேர்ந்து 50 கிலோ பயனற்ற காகிதத்தால் இந்த  விநாயகர் சிலையை செய்துள்ளனர். மறுசுழற்சி மற்றும் சுற்றுப்புற சூழல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த காகித விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தனர்.



Night
Day