தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் கோலாகல கொண்டாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கால்நடைகளை போற்றும் வண்ணம், தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் வெகு உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

பொங்கலுக்கு மறுநாள் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உழவனின் உயிர்த் தோழனாக இருந்து உழைத்த கால்நடைகளை போற்றும் வகையில் கால்நடைகளுக்கு விருந்து படைத்து, நன்றி கடன் செய்யப்படும் நிகழ்வே மாட்டுப்பொங்கல் ஆகும்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோ ஸ்ம்ரஷிணா சாலா கோவில் பகுதியில் மாடுகளை குளிக்க வைத்து, பொட்டு வைத்து, மாலை அணிவித்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வழிபட்டனர். அதன் பிறகு மாடுகளை சுற்றி வந்து கோமாதா எங்கள் குல மாதா என கூறியபடி பசு மாடுகளுக்கு சிறப்பு உணவுகள் அளித்து வணங்கி மகிழ்ந்தனர்.

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் காலையிலேயே தங்கள் வீடுகளில் உள்ள கால்நடைகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் பூசி கழுத்திற்கு மாலை போட்டு மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது. வீட்டிற்கு முன்பாக பாரம்பரியமிக்க பொங்க பானையில் பண ஓலையை பயன்படுத்தி பொங்கலிடப்பட்டது. பிறகு அந்த பொங்கலை மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்களை கால்நடைகளுக்கு வழங்கப்பட்டது. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாடுகளுக்கு பொங்கல் வைத்து மாலை அணிவித்து பூஜைகள் செய்து விவசாயிகள் கோலாகலமாக மாட்டு பொங்கலை கொண்டாடினர். நாகர்கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் தங்கள் மாடுகளை குளிப்பாட்டி பட்டு துணிகள், மாலைகள் அணிவித்து பொங்கல் வைத்தனர். பின்னர் கோவில் பூசாரிகள் மாடுகளுக்கு பூஜைகள் செய்து தீப ஆராதனை காட்டினர்.  பசுக்களுக்கும், காளைகளுக்கு கொம்பில் துணிகள், பூக்கள் சுற்றி பழங்கள் மற்றும் பொங்கலை வழங்கினர்.

தூத்துக்குடியில் நாட்டின பசுக்கள் வளர்க்கப்படும் கோசாலையில் மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பொங்கல் வைத்து கொண்டாட்டப்பட்டது. நாட்டின பசுக்கள் வளர்த்து பராமரிக்கப்பட்டு வரும் சங்கர் கோசாலையில் 12 வகையான சுமார் 70-க்கும் மேற்பட்ட நாட்டின பசுக்கள் பராமரிக்கப்படுகிறது. பசுக்களை காலையில் குளிப்பாட்டி சந்தனம், குங்குமம் பூசி புதிய வஸ்திரம் மற்றும் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாடுகளுக்கு பிடித்த பொங்கல், வாழைப்பழம், அகத்திக்கீரை ஆகியவை வழங்கப்பட்டது. 

திருப்பூரில் கால்நடைகளுக்கான மாட்டுப் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாடுகளை சுத்தம் செய்து, கொம்புகளை சீவி, வர்ணம் பூசி, சலங்கை கட்டி அலங்கரித்தனர். விஜயாபுரம் பகுதியில் கால்நடைகளின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் மாட்டுப்பொங்கலை கொண்டாடி மாடுகளை வழிபட்டு மரியாதை செலுத்தினர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி பாண்டுரங்கன் கோவிலில் நடைபெற்ற மாட்டுப் பொங்கலில் ஏராளமானோர் பங்கேற்று பசு மாடுகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர். இக்கோவிலுள்ள கோசாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசு மாடுகள் மற்றும் கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பசுக்களுக்கு தம்பதிகள் மஞ்சள், குங்கும பொட்டு வைத்து மலர் தூவி தீபங்கள் காட்டி வழிபட்டனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி, சங்ககிரி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதியில் விவசாயிகள் மாட்டுப் பொங்கலை சிறப்பாக கொண்டாடினர். மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் பூசி மாடுகளை சுற்றி குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் குடும்பங்களாக ஒன்று கூடி பொங்கலோ பொங்கல் என கோஷமிட்டனர். கன்று குட்டிகளை மேளம் தட்டி உற்சாகப்படுத்தி மாடுகளுக்கு பழம், பொங்கல் ஊட்டி விவசாயிகள் மாட்டுப் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாடுகளை கௌரவிக்கும் வகையில் பெண்கள் வீட்டு வாசலில் வண்ண வண்ண கோலம் போட்டு அசத்தினர். காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் உறவுக்கு தோள் கொடுத்த மாடுகளை கௌரவிக்கும் விதமாக வீட்டு வாசல்களில் விதவிதமான வண்ணங்களில் மாடுகளை கோலங்களாக போட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

திருச்சியில் பசு மடத்தில் நூற்றுக்கணக்கான பசுக்களை அலங்கரித்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பாலக்கரை, காஜாபேட்டையில் உள்ள பசு மடத்தில் 125க்கும் மேற்பட்ட மாடுகளையும், கிராமங்களில் உள்ள கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்து, மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு வண்ணம் பூசி, சலங்கை கட்டி, குங்கும பொட்டிட்டு அலங்கரித்திருந்தனர். தொழுவங்களில் பொங்கல் பொங்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மாடுகளுக்கு பொங்கல், பழம் கொடுத்து வணங்கி மகிழ்ந்தனர்.

சிவகங்கை மாவட்டம், சொக்காதபுரம் அருகே ஜல்லிக்கட்டில் பிரபலமான 10 காளைகளுடன் இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது பூர்வீக கிராமத்தில் மாட்டு பொங்கலை கொண்டாடினார். சொக்கநாதபுரம் அருகேவுள்ள கத்தப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் தொண்டமான். இவர் இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் மாட்டு பொங்கல் என்பதால் அவரது பூர்வீக கிராமத்தில் பொது மக்களுடன் இணைந்து அந்த காளைகள் அனைத்தையும் வைத்து பொங்கல் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜல்லிக்கட்டு போட்டியை சர்வதேச போட்டியாக மாற்றும் முயற்சியாகவே இந்த ஆண்டு இலங்கையில் ஜல்லிக்கட்டு  நடந்தப்பட்டுள்ளது. தமிழர்களின் கலாச்சாரத்தை இலங்கையில் நமது தமிழர்கள் வளர்த்தும், பாதுகாத்தும் வருவதாக தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டத்தில் மாட்டு பொங்கல் வழக்கமான உற்சாகத்துடன் விவசாயிகள் கொண்டாடி மகிழ்ந்தனர். நல்லம்பள்ளி, பென்னாகரம், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நாட்டு மாட்டு இனங்கள் பட்டி மாடுகளாக வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மாட்டுப் பொங்கல் தினத்தில் பட்டி மாடுகளை தூய்மைப்படுத்தி அதன் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, பொங்கல் வைத்து வணங்கி மாடுகளுக்கு பிரசாதங்களை ஊட்டி வணங்கினர்.





Night
Day