தமிழகம் முழுவதும் தேவாலங்களில் சிறப்பு பிரார்த்தனை

எழுத்தின் அளவு: அ+ அ-

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை புனித சவேரியார் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.  

பாளையங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவப் பெருமக்கள் பேராலயத்தில் திரண்டனர். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிவிக்கும் நற்செய்தி வாசிக்கப்பட்டு, சிறப்புத் திருப்பலி மற்றும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

பிரார்த்தனை முடிந்து வெளியே வந்த கிறிஸ்தவர்கள், ஒருவருக்கொருவர் "கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை" பரிமாறிக்கொண்டனர். 

தூய திரித்துவ பேராலயம், சீவலப்பேரி சாலையில் உள்ள புனித அந்தோணியார் பேராலயம், மேலப்பாளையம் புனித அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள்புரம் தூய மீட்பரின் ஆலயம், சாந்திநகர் குழந்தையேசு தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களிலும் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

மதுரையில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த புனித மரியன்னை தேவாலாயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியில்  ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மதுரை கீழவாசல் புனித மரியன்னை ஆலயத்தில் இரவு சிறப்பு திருப்பலியும் ஆராதனையும் நடைபெற்றது. சரியாக 12 மணிக்கு மதுரை உயர்மறை மாவட்ட பேராயர்  அந்தோணிசாமி சவரிமுத்து தலைமையில் இயேசு கிறிஸ்து பிறந்ததை தத்ரூபமாக எடுத்துரைக்கும் வகையில் நிகழ்த்தி காட்டபட்டு இயேசு கிறிஸ்து பிறந்ததாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அதனை கொண்டாடும் வகையில் சிறப்பு திருப்பலிகள், ஆராதனை பாடல்கள் பாடப்பட்டன.

இதில், மதுரையின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை என திராளனோர் கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயம் முழுவதிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்டு ஜொலித்தது. உலக அமைதிக்காகவும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மதுரை மாநகர் ஞான ஒளிவுபுரம் பகுதியில் உள்ள புனித வளனார் ஆலயத்திலும் இயேசு கிறிஸ்து பிறந்ததை தத்ரூபமாக எடுத்துரைக்கும் வகையில் நிகழ்த்தி காட்டபட்டு இயேசு கிறிஸ்து பிறந்ததாக அறிவிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு திருப்பலிகள், ஆராதனை பாடல்கள் பாடப்பெற்றது.

இதேபோன்று வாடிப்பட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி,  சோழவந்தான், மேலூர், சிலைமான், திருநகர், நாகமலைபுதுக்கோட்டை, மகபூப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான சிறப்பு திருப்பலி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றன.  இயேசு கிறிஸ்து பிறப்பு தத்துருவமாக காட்சிப்படுத்தப்பட்டது. கோட்டார் மறைமாவட்ட பேராயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தஞ்சை மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமான 179 ஆண்டுகள் பழமையான தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டப்பட்டது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள திரு இருதய பேராலயத்தில் வழிபாடு நடைபெற்றது. தஞ்சை நகரில் உள்ள சென் பீட்டர்ஸ் பேராலயம் மற்றும் தூய இருதய ஆண்டவர் பேராலயம் என அனைத்து ஆலயங்களும் அலங்கரிக்கப்பட்டு குடில்கள் அமைக்கப்பட்டன. இயேசு கிறிஸ்து பிறப்பு தத்துருவமாக காட்சிப்படுத்தப்பட்டது. திருப்பலிக்கு பிறகு ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து பரிமாறி கொண்டனர். இதேபோல, மாநகரில் உள்ள பல்வேறு கிறிஸ்துவ ஆலயங்களிலும் இரவு கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் உள்ள பல்வேறு முக்கிய தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. மேலப்புதூர் தூய மரியன்னை பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. விழாவில் திருச்சி மலை மாவட்ட பேராயர் ஆரோக்கியராஜ் சிறப்பு திருப்பலி ஆற்றினார். புத்தாடை அணிந்து  குடும்பத்தினருடன் தேவாலயத்திற்கு வந்த மக்கள், சிறப்பு திருப்பலியில் பங்கேற்று ஒருவருக்கொருவர் கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.


Night
Day