எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாகவே உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், தற்போதைய தொற்று வீரியமற்ற கொரோனா என்பதால் பரவலை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், கேரளாவில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல், சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேபோன்று கர்நாடகா , புதுச்சேரியிலும் கொரோனா தாக்கம் காணப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று பரவும் தகவலில் உண்மையில்லை என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று கூறிய செல்வ விநாயகம், தேவைப்பட்டால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என தெரிவித்தார்.