தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுதந்திர தினம் கோலாகல கொண்டாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டின் 79வது சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலகங்களில் மூவர்ணக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. 

சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மைதானத்தில் நடைபெற்ற 79வது  சுதந்திர தின விழாவில், தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி, தேசியகொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்களையும், வண்ண பலூன்களையும் ஆட்சியர் பறக்கவிட்டார். 

விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மூவர்ண பலூன்களையும், சமாதான புறாக்களையும் பறக்கவிட்டார். ராமநாதபுரத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மூவர்ண்ணங்களால் ஆன 79 கிலோ கேக்கை வெட்டி மகிழ்ந்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் சுதந்திர தின விழாவானது கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் மூவர்ண பலூன்கள் மற்றும் வெள்ளை நிற புறாக்களை வானில் பறக்க விட்டார்.

திருச்சி கோட்ட ரயில்வே சார்பில் கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது. இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருச்சி ரயில்வே கோட்டம் சாா்பில், கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது. கோட்ட மேலாளர் பாலக் ராம் நேகி,   தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செய்தாா். தொடா்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்களின் பைக் சாகசம், வீராங்கனைகள் பங்கேற்ற அதிநவீன துப்பாக்கி சாகச நிகழ்ச்சி மற்றும் ராக்கி, மேக்ஸ், டான் ஆகிய 3 மோப்ப நாய்களின் சாகசம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நாட்டின் 79வது சுதந்திர தினத்தையொட்டி, இந்திய சுதந்திரத்திற்கு அடித்தளமாக விளங்கிய, வேலூர் கோட்டையின் நுழைவு வாயிலில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் வேலூர் கோட்டையில் உள்ள கொத்தளத்தில் ஆட்சியர்  தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியர் சுப்புலெட்சுமி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து, சமாதான புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார். மேலும், வேலூர் சிஎம்சி மருத்துவமனை அருகேயுள்ள காமராஜர் உருவச்சிலை, வடக்கு காவல் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள டாக்டர்.அம்பேத்கர் உருவச்சிலை, வேலூர் அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் அருகில் உள்ள சத்தியமூர்த்தி உருவச்சிலை ஆகியவற்றுக்கும் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மூவர்ண்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தருமபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சதீஸ்,தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் வண்ண பலூன்களை வானில் பறக்க விட்டார். 

மயிலாடுதுறையில் அமைந்துள்ள, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பங்கேற்று மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து வண்ண பலூன்கள் மற்றும் புறாக்களை பறக்க விடப்பட்டன.

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 79 ஆவது சுதந்திர தின விழாவில்  மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கலந்துகொண்டு தேசியக் கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சமாதான புறாக்கள் மற்றும் வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டு மகிழ்ந்தார்.

79 சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். 

Night
Day