எழுத்தின் அளவு: அ+ அ- அ
கோவை மாவட்டம் அன்னூர் அருகே இயங்கி வரும் தனியார் காப்பகத்தில் சிறுவர்கள் பெல்டால் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் "கிரேஸ் ஹாப்பி ஹோம் டிரஸ்ட்" என்ற தனியார் சிறுவர் காப்பகத்தில் 6 முதல் 18 வயதுடைய 9 சிறுவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்தக் காப்பகத்தில் உள்ள ஒரு காப்பாளர் சிறுவர்களை பெல்டால் தாக்கும் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகளில் குழந்தைகளை தாக்குவதற்கு நீதிமன்றத் தடை உள்ள நிலையில், காப்பகங்களில் குழந்தைகளை கண்காணிக்கவும், கண்டிக்கவும் மட்டுமே அனுமதி உள்ளது. ஆனால், இந்தக் காப்பகத்தில் நடந்த சம்பவம் நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டிய காப்பகங்களில் அரங்கேறும் இத்தகைய சம்பவங்களுக்கு கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய காப்பகத்தின் பொறுப்பாளர் செல்வராஜ், தாங்கள் முறையாக அனுமதி பெற்று காப்பகத்தை நடத்தி வருவதாகவும், சிறுவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்னையை சமாளிக்க பெட்டால் தாக்கி மிரட்டியதாக கூறினார்.
விடுதியில் சிறுவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.