டாஸ்மாக் MD விசாகனிடம் 2வது நாளாக ED தீவிர விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகனிடம் இரண்டாவது நாளாக அமலாக்‍கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டாஸ்மாக்‍ நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்‍கு முறைகேடு நடந்த புகாரின் பேரில் அமலாக்‍கத் துறையினர் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சோதனை நடத்தினர். டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபானக் கடைகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டியது.

இந்த சோதனையை எதிர்த்து திமுக அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்த முழு அனுமதி அளித்து உத்தரவிட்டது. 

இந்நிலையில் 2வது நாளாக இன்று சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள், சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், விசாகனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்‍கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். விசாகன் மற்றும் அவரது குடும்பத்தினர் வங்கிக் கணக்கு பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை ஆய்வு செய்கின்றனர். விசாகன் பயன்படுத்தும் மடிக்கணினியையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

முன்னதாக விசாகன் வீட்டிற்கு வெளியே கிழிந்த நிலையில் இருந்த WHATSAPP SCREENSHOTகளின் பிரிண்ட் அவுட்களையும் அமலாக்‍கத்துறையினர் கைப்பற்றி விசாரித்தனர்.
டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை மீண்டும் விசாரணைக்கு அழைத்து சென்று அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். நேற்று 5 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் மீண்டும் அழைத்து செல்லப்பட்டார்.

இதனிடையே, சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த எஸ்என்ஜே நிறுவனத்தின் அதிகாரி மேகநாதன், தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் விக்ரம் மற்றும் சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ் குமார் வீடு உட்பட ஆறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்‍கு நெருக்கமானவரான ரத்தீஷ் என்பவரின் சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகரில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. 

ரெட் ஜெயன்ட் வெளியிடும் திரைப்படங்களுக்கு தொடர்பான வரவு செலவு கணக்கு பார்த்து வந்த ரத்தீஷ், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வலது கரமாக இருந்து வருபவர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரத்தீஷ் வீட்டிலிருந்து பல்வேறு ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

Night
Day