சொன்னீங்களே... செஞ்சீங்களா... தமிழச்சியை வழிமறித்த தொகுதி மக்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை முற்றுகையிட்ட தென் சென்னை பகுதி மக்கள், அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். தமிழச்சி தங்கபாண்டியனின் பிரசார வாகனம் மறிக்கப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
 
மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19 ம் தேதி ஓரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். 

தென்சென்னை தொகுதியை பொறுத்தவரை திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட மயிலாப்பூர் பி.எம்.தர்கா தெருவில் தமிழச்சி தங்கபாண்டியன் பிரச்சாரம் மேற்கொண்டார். 

வாக்கு சேகரிப்பதற்காக பிரச்சார வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்தபோது அந்த தொகுதியை சேர்ந்த மக்கள் சிலர் அவரது வாகனத்தை வழிமறித்து, திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து கேள்விகளை எழுப்பினர். 

குறிப்பாக பாரதிதாசன் நகர் பகுதி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 170 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் மிகவும் சேதம் அடைந்திருப்பதாக புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவே இல்லை என குற்றச்சாட்டினர்.

கடந்த தேர்தலில் வாக்கு சேகரிக்க வந்த போது சரிசெய்து தருவதாக கூறிவிட்டு, அதனை நிறைவேற்றாமல்  தற்போது மீண்டும் வாக்கு சேகரிக்க ஏன் வந்தீர்கள் என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினர். தற்போது எம்.பி.யாக உள்ள நீங்கள் தொகுதி பக்கம் வருவதே இல்லை எனக்கூறி தமிழச்சி தங்கபாண்டியனிடம் தொகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை சற்றும் எதிர்பார்க்காத தமிழச்சி தங்கபாண்டியன் செய்வதறியாது திகைத்து நின்றார். இந்த தொகுதியில் தேர்தலுக்கு முன்பவாகவே திமுகவின் முடிவு என்ன என்பது தெரிந்துவிட்டதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Night
Day