சேதமடைந்த அரசு தொகுப்பு வீடுகள்..! அச்சத்துடன் வாழும் மக்கள்..!!

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே அரசு தொகுப்பு வீடுகளில், ஆங்காங்கே சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து, சுவர்கள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. உயிர் பயத்துடன் வாழும் மக்களின் கோரிக்கையை விவரிக்கிறது இந்த செய்தி...

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு தொகுப்பு வீடுகளின் நிலைமை இதுதான்.. 

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் 100-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன. இங்கு ஏராளமான பெண்கள் கைக்குழந்தைகளை வைத்துக் கொண்டு வசித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடுகள், தற்போது சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரியும் அளவிற்கு சேதமடைந்துள்ளன. மழைக்காலங்களில் வீடுகளின் சுவர்களில் தண்ணீர் ஊறி, ஈரப்பதத்தினால் விஷ ஜத்துக்கள் வீட்டினுள் நுழையும் அபாயம் நிலவி வருகிறது. வீட்டினுள் மழைநீர் ஒழுகுவதாகவும், இரவு நேரங்களில் குழந்தைகளை வைத்துக் கொண்டு விடிய விடிய கண்விழித்து மழைநீரை வெளியேற்றும் அவலம் நீடிப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் வீட்டினுள் நுழைந்தாலே சிமெண்ட் பூச்சுகள் கொட்டுவதாகவும், எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்திலேயே தினம் தினம் தூங்கி எழுவதாகவும் அப்பகுதி பெண்கள் வேதனை தெரிவித்தனர். 

அரசு தொகுப்பு வீடுகளில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்துள்ள நிலையில், வெளியில் தெரியும் கம்பிகள் அவ்வப்போது இடிந்து விழுவதாகவும், பெரிதளவில் மழை பெய்யும் காலங்களில் பள்ளிகளுக்கு சென்று தஞ்சம் அடைவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடுகளை சீரமைக்க வேண்டும் என கோரி அதிகாரிகளை நாடினால் ஒருவரும் தங்கள் பகுதியை எட்டிப்பார்க்கவில்லை என்றும் வேதனையுடன் குற்றம் சாட்டுகின்றனர். 

அன்றாட பிழைப்புக்கே ஓடோடி உழைக்கிறோம், வீடு கட்டும் அளவுக்கு பணத்திற்கு நாங்கள் என்ன செய்வோம் என வேதனை தெரிவிக்கும் மக்கள், மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து சேதமடைந்த வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களது கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது. 

Night
Day