சுங்கச்சாவடி ஊழியர், பேருந்து ஓட்டுநா் வாக்குவாதம் - வாகன நெரிசல்

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சி சுங்கச்சாவடியில் அரசு பேருந்து ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

ராமேஸ்வரம் வரும் வெளியூர் வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகளுக்கு ராமேஸ்வரம்  நுழைவு பகுதியில் ராமேஸ்வரம் நகராட்சி சார்பில் சுங்க வரி கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடியில் உள்ள ஒப்பந்த ஊழியர் ஒருவர் தொடர்ச்சியாக அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளிடம் கையில் கம்புடன் அடவாடியாகவும்,  அரசு பேருந்து ஓட்டுநர்களை ஒருமையில் பேசி திட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் சிதம்பரத்திலிருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த அரசு பேருந்தை, அந்த ஊழியர் வெகுநேரமாக வரிசையில் நிறுத்தி வைத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பேருந்து ஓட்டுநர் இறங்கி கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவ்வழியாக வந்த மற்ற அரசு பேருந்து ஓட்டுநர்களும் அந்த ஊழியரை தட்டிக்கேட்டனர். இதன்காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் விரைந்து சுங்க கட்டணம் வசூல் செய்யும் ஒப்பந்த ஊழியரை எச்சரித்தனர்.

Night
Day