எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருப்பூர் மாவட்டம் உடுமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சுகுணா சிக்கன் நிறுவன அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
பிராய்லர் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் பிரபல நிறுவனமான சுகுணா புட்ஸ் என்ற கோழி பண்ணை நிறுவனத்திற்கு சொந்தமாக தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தாய்க்கோழி பண்ணைகள் மற்றும் கறிக்கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்நிறுவனம் வரி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை அடுத்து, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள சுகுணா புட்ஸ் தாய் கோழி பண்ணை மண்டல அலுவலகம் மற்றும் 2 கோழி தீவன உற்பத்தி ஆலைகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து 2வது நாளாக உடுமலை, குடிமங்கலம் வரதராஜபுரம், கணபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவையில் உள்ள சுகுணா சிக்கன் நிறுவன அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டுள்ளனர். மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவிநாசி சாலையில் அண்ணா சிலை அருகே உள்ள சுகுணா சிக்கன் நிறுவன அலுவலகத்தில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.