எழுத்தின் அளவு: அ+ அ- அ
சேலம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக குழந்தைகளை விற்பனை செய்து வந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஜோதிபட்டியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் மீதான பணமோசடி தொடர்பான புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை யில், மோகன்ராஜ் ஈரோட்டை சேர்ந்த ஆண் குழந்தையை வாங்கி சேலத்தில் விற்றதும், இதற்கு உடந்தையாக அவரது மனைவி நாகசுதா இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தீவிர விசாரணையில் களமிறங்கிய போலீசார், மோகன்ராஜிடம் குழந்தையை வாங்கி கொடுத்த பர்வீன் பானு, பத்மாவதி, ஸ்ரீதேவி உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். இவர்கள் இணைந்து கடந்த 3 ஆண்டுகளாக குழந்தை விற்பனையில் ஈடுட்டதும், இதுவரை 30க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர், கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளில் குழந்தை இல்லாத தொழிலதிபர்களுக்கு ஏழைகளிடம் இருந்து குழந்தைகளை வாங்கி கொடுத்தது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து, யார் யாருக்கெல்லாம் குழந்தையை விற்பனை செய்துள்ளனர், யாரெல்லாம் குழந்தையை வாங்கினர் என்பது குறித்த பட்டியல் தயார் செய்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.