எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவை மாற்றி அமைக்க கோரிய தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களிடம் இடைத்தரகர்கள் மூளைச்சலவை செய்து சட்ட விரோதமாக சிறுநீரகத்தை தானமாக பெற்றனர். போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை சிறுநீரகங்களை விற்க வற்புறுத்திய நிலையில் திருச்சி மற்றும் பெரம்பலூரில் இரண்டு தனியார் மருத்துவமனைகள் உடந்தை என தெரியவந்தது. மேலும் குறிப்பிட்ட இரண்டு மருத்துவமனைகளும் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்களுக்கு சொந்தமானது எனவும் கூறப்படுகிறது.
இதனால் இந்த விவகாரத்தை தமிழக அரசு முறையாக விசாரிக்க வாய்ப்பு இல்லை எனக் கூறி வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எஸ்எம் சுப்பிரமணியம் மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு விசாரணை குழுவை அமைக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. இந்நிலையில் மதுரை அமர்வின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை குழுவை எதிர்க்கவில்லை என்றும், விசாரணை குழுவில் இடம் பெறும் அதிகாரிகளின் பெயர்களை நாங்கள் பரிந்துரை செய்கிறோம் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் நீதிமன்றம் தேர்தெடுத்துள்ள அதிகாரிகள் அனைவரும் 200 கிலோ மீட்டர் தொலைவில் பணியில் உள்ள அதிகாரிகள் என தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் சிறப்பு குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரிப்பதாகவும் அதே வேலையில் , விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்காக சிறப்பு குழுவை அமைத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு உத்தரவுக்குள் தலையிட விரும்பவில்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக தெரிவித்திருந்த கருத்துக்களை மட்டும் நீக்குவதாக உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை முடித்து வைப்பதாக அறிவித்தனர்.