எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த சுங்கக் கட்டண உயர்வு, வாகன ஓட்டிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடூர், உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் நள்ளிரவு 12 மணி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண கார், வேன், ஜீப் வாகனங்களுக்கு பலமுறை செல்ல மாத கட்டணமாக இதுவரை ஆயிரத்து 930 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் நள்ளிரவு முதல் 45 ரூபாய் உயர்த்தி ஆயிரத்து 975 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. சிறிய ரக வாகனம், இலகு ரக வாகனம் ஒரு நாளில் பலமுறை பயன்பாட்டிற்கு 170 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் 5 ரூபாய் உயர்த்தி 175 ரூபாயாகவும் மாத கட்டணம் 3 ஆயிரத்து 380 ரூபாயிலிருந்து 80 ரூபாய் உயர்த்தி 3 ஆயிரத்து 460 ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மிக கனரக வாகனங்கள் ஒரு முறை செல்ல 360 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் 10 ரூபாய் உயர்த்தி 370 ரூபாயும் ஒரு நாளில் பலமுறை பயன்படுத்த 545 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தநிலையில் 10 ரூபாய் உயர்த்தி 555 ரூபாயாகவும் மாதத்திற்கு 11 ஆயிரத்து 115 ரூபாயாகவும் வசூலிக்கப்பட உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் சுங்க கட்டண உயர்வு அமல் வந்தது. அதன்படி, கார், பயணியர் வேன், ஜீப் வாகனங்களுக்கு 155 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தநிலையில், 5 ரூபாய் உயர்ந்து 160 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இலகு ரக வாகன கட்டணம் 180 ரூபாயில் இருந்து 185 ரூபாயாக உயர்ந்துள்ளது. விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் 5 ரூபாய் முதல் 395 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதூர், பாண்டியாபுரம் சுங்கச் சாவடிகளிலும் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளது. கார்கள் ஒரு முறை பயணத்திற்கு 90 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், 5 ரூபாய் உயர்ந்து 95 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் ஒரு முறை செல்ல 510 ரூபாய் வசூலித்து வந்த நிலையில் தற்போது 520 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கரூர் மாவட்டம் மணவாசி மற்றும் வேலன்செட்டியூர் சுங்கச் சாவடிகளிலும் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளது. மணவாசி சுங்கச்சாவடியில் இலகு ரக வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் 100 ரூபாயில் இருந்து 105 ரூபாயாகவும், டிரக், பேருந்து ஆகியவற்றிற்கு 205 ரூபாயில் இருந்து 210 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு 325 ரூபாயில் இருந்து 335 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் வேலன்செட்டியூர் சுங்கச் சாவடியிலும் ஐந்து ரூபாயில் இருந்து 225 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
திருச்சி சமயபுரம், மதுரை மாவட்டம் எலியார்பத்தி, சேலம் மாவட்டம் ஓமலூர், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா என தமிழ்நாட்டில் மொத்தம் 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.