எழுத்தின் அளவு: அ+ அ- அ
தனது மூச்சு இருக்கும் வரை பாமகவுக்கு நானே தலைவர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சித் தலைவர் பதவி தொடர்பாக கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. அன்புமணி ஆதரவாளர்களை ராமதாசும், ராமதாஸின் ஆதரவாளர்களை அன்புமணியும் மாறி மாறி நீக்கி வருகின்றனர். அதன்படி சேலம் மாநகர் மாவட்ட செயலாளராக உள்ள சட்டமன்ற உறுப்பினர் அருளை கட்சியின் இணைப் பொதுச் செயலாளராக நியமித்து ராமதாஸ் உத்தரவிட்டார்.
இதனையடுத்து சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அருளை அன்புமணி நீக்கினார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், தன்னால் வளர்க்கப்பட்ட பாமகவுக்கு மூச்சு இருக்கும் வரை நானே தலைவராக இருப்பேன் என்று திட்டவட்டமாக கூறினார். எல்லா பிரச்சனைக்கும் முடிவு உண்டு என்று கூறிய ராமதாஸ், இந்த பிரச்சனைக்கு முடிவு வரவில்லை என்றும் கூறினார்.