இளைஞர்கள் முன்னேற்றம் அடையாததற்கு திமுகவே காரணம் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தால் குழந்தைகள் பாழாகி வருகிறது என்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை திமுக சீரழித்துவிட்டது என குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, கச்சத்தீவை தாரைவார்த்தது காங்கிரஸ், திமுக கூட்டணிதான் என மீண்டும் குற்றம்சாட்டினார். வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வேலூரில் விமான நிலையம், புதிய ரயில்வே திட்டங்கள் அமல்படுத்தப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார். 

வேலூர் கோட்டை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் வந்தார். அவருக்கு வேட்பாளர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழில் வணக்கம் எனக்கூறி உரையை தொடங்கினார். 

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக வளமான இந்தியாவுக்கு பாஜக அரசு அடித்தளம் அமைத்துள்ளதாகவும், இந்தியா வல்லரசு நாடாக மாறி வருகிறது, அதற்கு தமிழகத்தின் பங்கு அளப்பரியது என கூறினார். மேலும், வேலூரில் உதான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் கொண்டு வரப்படும் என்றும், விமான நிலைய திட்டப்பணிகள் விரைவில் நிறைவடையும் என்றும் தெரிவித்த பிரதமர் மோடி, தொழில் வர்த்தகங்களை அதிகரிக்கும் நோக்கில் புதிய ரயில்வே திட்டங்கள் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார்.  

தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தால் குழந்தைகளின் வாழ்க்கை பாழாகி வருவதாகவும், இளைஞர்களின் எதிர்காலத்தை திமுக சீரழித்து விட்டதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். தமிழகத்தில் பள்ளிகள் அருகில் போதை பொருள் புழக்கத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனத்தையும் தெரிவித்தார். மேலும் திமுக அரசு குடும்ப அரசியல் செய்து நாட்டை அழிக்க முயற்சிப்பதாகவும், தமிழக இளைஞர்கள் முன்னேற்றம் அடையாததற்கு காரணம் திமுகதான் காரணம் என குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, ஊழல் செய்வதற்கு காப்பீட்டு உரிமை வைத்திருப்பது திமுகதான், நாட்டை கொள்ளையடிப்பது மட்டுமே திமுகவின் ஒரே கொள்கை என கடுமையாக சாடினார். குறிப்பாக போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக் திமுகவில் இருந்தவர்தான் என்றும் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,. கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ், திமுகவின் போலி முகத்தை நாடே விவாதித்து வருவதாக கூறிய பிரதமர் மோடி, கச்சத்தீவை விட்டுக் கொடுத்ததால் தான் தமிழக மீனவர்களின் நலன் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், நாடாளுமன்றத்தில் தமிழர்களின் அடையாளமான செங்கோல் நிறுவியதை கூட திமுக எதிர்த்து விமர்சனம் செய்தது என்றும், திமுகவினர் இந்துகளுக்கு எதிரானவர்கள் என்பதால்தான் ராமர்கோவிலை எதிர்க்கின்றனர் என்றும் கூறினார். 

தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவை இழிவுபடுத்தியதும் திமுகதான் என குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, பெண்களை இழிவுப்படுத்துவதில் திமுகவும், காங்கிரஸும் கைகோர்த்துள்ளதாக சாடினார். மேலும், தற்போதைய திமுக தலைவர்களும் பெண்களை மதிப்பதில்லை என்றும், பாஜக ஆட்சியின் மூலம் பெண்களுக்கான மரியாதையை மீட்டெடுப்போம் என உறுதி கூறினார். 

Night
Day