எழுத்தின் அளவு: அ+ அ- அ
தன்னுடன் மல்லை சத்யா பல போராட்டங்களில் பங்கேற்றதற்காக, அவர் துரோகம் செய்யவில்லை என்றெல்லாம் கூற முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடியாக துரோகி பட்டம் கொடுத்து மதிமுகவில் இருந்து தன்னை வெளியேற்ற வைகோ முயற்சிப்பதாக மல்லை சத்யா ஆதங்கத்துடன் குமுறி உள்ளார்.
மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுடன் இருந்த மோதல் போக்கு காரணமாக கட்சியின் முதன்மைச் செயலாளர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக கடந்த ஏப்ரல் மாதம் துரை வைகோ அறிவித்தார். இதனையடுத்து, சென்னையில் நடந்த கட்சியின் நிவாகக் குழு கூட்டத்தில் இருவரையும் கைகுலுக்க வைத்த வைகோ, பிரச்சினையை தீர்த்து வைத்தார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த வைகோ, தன்னுடன் மல்லை சத்யா பல போராட்டங்களில் பங்கேற்றதற்காக, அவர் துரோகம் செய்யவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது என மறைமுகமாக விமர்சித்துள்ளார். வெளிநாடுகளுக்கு செல்லும் மல்லை சத்யா, தான் ம.தி.மு.க.,வை சேர்ந்தவன் என்றோ, ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் என்றோ கூறுவதில்லை எனவும் மாமல்லபுரம் தமிழ் சங்கத்தின் தலைவர் என்றும் மட்டுமே கூறி வருவதாகவும் வைகோ தெரிவித்துள்ளார். பல காலம் தனக்கு துணையாக இருந்த மல்லை சத்யா, சமீபத்தில் அப்படி இல்லை என கூறிய வைகோ, கட்சியிலிருந்து வெளியேறிய நபர்களுடன் அவர் தொடர்பில் இருப்பது வருத்தம் அளிப்பதாகவும் கூறினார்.
வைகோவின் கருத்துக்கு பதிலளித்துள்ள மல்லை சத்யா, வாரிசு அரசியலுக்காக வைகோ தனக்கு துரோகிப் பட்டம் கொடுத்துள்ளதாக ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
மேலும், வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய தன்னை துரோகி என்று கூறும் அளவிற்கு துணிந்துள்ளதாகவும், பூவிருந்தமல்லியில் நடைபெறும் மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றும் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
இதனிடைய வாரிசு அரசியலை ஏற்காமல் ம.தி.மு.கவிலிருந்து வெளியேறியவர்களுடன் மல்லை சத்யா ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மல்லை சத்யா விரைவில் மதிமுகவில் இருந்து வெளியேறி புதுக்கட்சியை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.