எழுத்தின் அளவு: அ+ அ- அ
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரினார்.
சென்னை மாநகராட்சியின் 5வது மண்டலமான ராயபுரத்தில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், ராயபுரம் உட்படப் பிற மண்டலங்களில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2021 டிசம்பரில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனிடையே, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரினார். மன்னிப்புக் கோரியதால் 1 லட்சம் ரூபாய் அபராதத்தை சென்னை உயர் நீதிமன்றம் திரும்ப பெற்றது.