எழுத்தின் அளவு: அ+ அ- அ
4 சுங்கச்சாவடிகள் வழியாக வரக்கூடிய அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நாளை முதல் FASTAG ஒட்டி வர வேண்டும் என அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மதுரை - கன்னியாகுமரி சாலையில் உள்ள கப்பலூர், எட்டூர்வட்டம்,சாலைப்புதூர், நான்குநேரி ஆகிய சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகள் கட்டண நிலுவையாக 276 கோடி ரூபாய் பாக்கிவைத்துள்ளதாகவும் அதனை செலுத்த வலியுறுத்தியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சுங்கச்சாவடி நிர்வாகம் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி, கட்டண நிலுவைப்பாக்கி 276 கோடி ரூபாயை தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் உடனடியாக செலுத்த வேண்டும் என்றும், செலுத்த தவறினால் ஜூலை 10 ம் தேதி முதல் அரசு பேருந்துகளை சுங்கச்சாவடி வழியாக அனுமதிக்ககூடாது என உத்தரவிட்டிருந்தார்.
இதன் காரணமாக இந்த வழியாக வரக்கூடிய பாஸ்டேக் இல்லாத அரசு நகர் பேருந்துகளை நிறுத்தி ஓட்டுநர்களிடம் நாளை முதல் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டி வரவேண்டும் என சுங்கச்சாவடி ஊழியர்கள் அறிவுறுத்தி காவல் துறையினர் பாதுகாப்புடன் ஓட்டுனர்களிடம் கையெழுத்து பெற்று இன்று ஒருநாள் மட்டும் அனுமதித்து வருகின்றனர்.