எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரத்தின் எதிரொலியாக மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் அரசு மருத்துவர் மீதான தாக்குதலை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இரவு நேர பாதுகாப்பையும் அதிகரிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் ரோந்து காவலர்கள் ரோந்து வாகனங்களில் அனைத்து மருத்துவமனைகளையும் கண்காணிக்கவும் ஆணையிட்டுள்ளார். ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் கவனத்திற்கு வந்தால் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள டிஜிபி சங்கர் ஜிவால், அனைத்து மருத்துவமனை டீன்கள் மற்றும் மருத்துவமனை பொறுப்பாளர்கள் பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.