எழுத்தின் அளவு: அ+ அ- அ
அடுத்த ஓராண்டுக்கு பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் நீடிப்பார் என மாமல்லபுரத்தில் நடைபெற்ற பாமக பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொது செயலாளராக வடிவேல் ராவணனும் பொருளாளராக திலகபாமாவும் தொடர்வார்கள் என்றும் தீர்மான நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கு இடையேயான கருத்து வேறுபாடு நாளுக்குநாள் அதிகரித்து தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாமல்லபுரத்தில் இன்று பொதுக்குழு கூட்டம் நடத்த அன்புமணி அழைப்பு விடுத்திருந்த நிலையில் இதற்கு தடை விதிக்கக் கோரி ராமதாஸ் ஆதரவு பொதுச் செயலாளரான முரளிசங்கர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அன்புமணி அறிவித்த பொதுக் குழுவுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று பாமகவின் பொதுக் குழு கூட்டம் தலைவர் அன்புமணி தலைமையில் நடைபெற்றது. இதில் பாமகவின் தலைவராக அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணி தொடர்வார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பாமக பொதுச் செயலாளராக வடிவேல் ராவணனும் பொருளாளராக திலகபாமாவும் மேலும் ஓராண்டுக்கு நீடிப்பார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.