எழுத்தின் அளவு: அ+ அ- அ
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழக பாஜகவின் உட்கட்சி பூசல் அதிகரிப்பது கட்சிக்கு நல்லதல்ல என தமிழக பாஜக நிர்வாகிகளிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் உள்ள தமது இல்லத்தில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மூத்த தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், கேசவ விநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், தமிழக பாஜக நிர்வாகிகளிடம் 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்ட அமித்ஷா, தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் அதிகரிப்பது கட்சிக்கு நல்லதல்ல என கண்டித்ததாக கூறப்படுகிறது.
மேலும் 234 தொகுதிகளிலும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம், தொகுதி பங்கீடு, பாஜக வலுவாக உள்ள தொகுதிகள் குறித்து கேட்டறிந்ததாகவும், பாஜக கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து அமித்ஷா பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.