வெளிநாட்டில் வசிப்போரே கவனம் - இப்படியும் ஒரு கும்பல் சுத்துது..!

எழுத்தின் அளவு: அ+ அ-

தனது வீட்டை ஆக்கிரமித்தவரிடம் இருந்து 34 வருடத்திற்கு பிறகு  பெண் ஒருவர் தனது வீட்டை போலீசார் உதவியுடன் மீட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண், போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடல் போன்ற வீட்டை 34 வருடங்களாக மனசாட்சியே இல்லாமல் ஏமாற்றி வந்த இவர் தான் தினேஷ்.

ஒரு கோடி ருபாயா, இரு கோடி ரூபாயா மொத்தம் 15 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை ஆட்டையை போட நினைத்த இவரிடம் பல வருடங்களாக போராடி தனி ஒரு பெண்ணாக அதனை மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

34 வருடங்களுக்கு முன்பு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டீனாக பொறுப்பு வகித்தவர் தான் விக்டர். இவர் தனது மனைவியுடன் செனாய் நகரில் உள்ள தனது 2 கிரவுண்ட் வீட்டில் வசித்துள்ளார். பின்னர் பணி ஓய்வு கிடைத்தவுடன் விக்டரும் அவரது மனைவியும் அமெரிக்காவில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இதற்கு முன்னதாக தனது வீட்டை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என அருகில் உள்ள சாந்தகுமார் என்பவரிடம் சொல்லிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து விக்டரும் அவரது மனைவியும் காலமாகி உள்ளனர். இந்நிலையில் தான் கடந்த 1999 ஆம் ஆண்டு சென்னை வந்த விக்டரின் மகள், செனாய் நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற போதுதான் அவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி. 

சாந்தகுமாரின் உறவினர்கள் அது தங்கள் வீடு என கூறி விக்டரின் மகளையும் அவரது அவரது குடும்பத்தினரையும் வெளியே துரத்தியதாக சொல்லப்படுகிறது. இதன் பின்னர் தனது பூர்வீக வீட்டை மீட்க முடியாமல் ஏமாற்றத்துடன் நாடு திரும்பிய விக்டரின் மகள் தனது பெயரில் இருந்த வீட்டை தனது மகள் தீபா பெயரில் எழுதி வைத்துள்ளார்.

அதன் பின்னர் பல ஆண்டுகளாக இவர்கள் சென்னை வரும்போதெல்லாம் பூர்வீக வீட்டை மீட்கும் முயற்சித்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் பத்தாம் தேதி தனது வீட்டிற்கு சென்ற விகடரின் பேத்தி தீபா, அந்த வீடு சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அங்கு சாந்தகுமாரின் பேரன் என்று கூறிக்கொண்ட தினேஷ் என்பவர், இது தன்னுடைய தாத்தா சாந்தகுமாரின் சொத்து என கூறி தீபாவை நாய்களை விட்டு கடிக்க வைத்ததாக சொல்லப்படுகிறது. எதற்கும் அஞ்சாத தீபா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் 28 ஆம் தேதி வீடு தனக்கு சொந்தமானது என்று கூறி அதற்கான புகைப்பட ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை காண்பித்து புகார் அளித்தார்.

இந்த விவகாரத்தில் சாந்தகுமாரின் குடும்பத்தினர் தீபாவை தொடர்ந்து மிரட்டியதாக கூறப்படும் நிலையில் அமெரிக்கா தூதரகத்தின் உதவியுடன் வடக்கு கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கார்கை சந்தித்து நேரடியாக புகார் அளித்துள்ளார் தீபா.

இதனை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த வீட்டை ஆய்வு செய்தனர். அங்கு தீபாவிற்கு சாதகமான வகையில் மற்றொரு ஆதாரமும் சிக்கியது. அந்த வீட்டில் ஒரு தனி அறையில் தீபாவுக்கு சொந்தமான பொருட்களை வைத்து பூட்டி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் போலீசார் ஆக்கிரமிப்பாளர் தினேஷை எச்சரித்த நிலையில், இனிமேல் வேலைக்கு ஆகாது என அவர் வீட்டின் சாவியை உரிமையாளர் தீபாவிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சத்தமில்லாமல் வெளியேறினார். 

இந்த விவகாரத்தில் வீட்டை ஆக்கிரமித்து இருந்த தினேஷிடம் எந்த ஒரு ஆவணங்களும் இல்லாததால் போலீசார் உதவியுடன் எளிதில் மீட்டதாக தீபா தெரிவித்துள்ளார். சிங்கப்பெண் தீபா 34 வருட போராட்டத்திற்குப் பின்பு 15 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள தனது பூர்வீக வீட்டை மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day