மேற்குவங்கத்தில் மின் விளக்கை அணைத்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மாநில அரசை கண்டித்து, ஆளுநர் மாளிகை உட்பட அனைத்து இடங்களில் மின் விளக்கை அணைத்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது... 


மேற்குவங்க மாநிலம் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி 31 வயதான பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்டார். இவ்விவகாரம் மேற்குவங்க மாநில அரசியலில் பெரும் புயலை உருவாக்கிய நிலையில், மாநில அரசுக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடையத் தொடங்கியது. பயிற்சிப் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டு 3 நாட்களில் வழக்கு மேற்குவங்க காவல்துறையிடம் இருந்து சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டாலும் மேற்கு வங்க அரசு மற்றும் காவல்துறைக்கு எதிரான முழக்கங்களை, போராட்ட களங்களில் காண முடிகிறது. பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மேற்குவங்க அரசு மற்றும் காவல்துறைக்கு உண்மை தெரிந்தும் மூடி மறைப்பதாகவே போராட்டத்தில் ஈடுபடுவோர் குற்றம் சாட்டுகின்றனர். அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடையும் நிலையில், போராட்டங்களை தணிக்க மத்திய அரசை குற்றம் சாட்டி 2 முறை பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதினார். 

பயிற்சி பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்கக்கோரி மருத்துவர்கள், மாணவ அமைப்புகள், அரசியல் கட்சியினர் என அடுத்தடுத்து போராட்டம் வலுவடைந்த நிலையில் 2 நாட்கள் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடரை மம்தா பானர்ஜி கூட்டினார். இதில், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கவும் பாலியல் வழக்குகள், விசாரணையை 2 வாரங்களில் முடிக்கவும் வகை செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மம்தா பானர்ஜியின் சட்ட திருத்த மசோதா போராட்டங்களை ஓரளவுக்கு தணிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் போராட்டங்களின் தாக்கம் குறைந்தபாடில்லை. மாநில முழுவதும் மின் விளக்குகளை அணைத்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்த வேண்டும் என மருத்துவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இதனை ஏற்று பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 9 மணிக்கு மின்விளக்குகள் முழுவதும் அணைத்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள், சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் மெழுகுவர்த்தி ஏற்றி நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். 

இவர்கள் மட்டுமின்றி கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையிலும் போராட்டம் கடைபிடிக்கப்பட்டது. ஆளுநர் மாளிகையில் இரவு 9 மணிக்கு மின்விளக்குகள் முழுவதும் அணைக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. மேற்கு வங்க ஆளுநர் சி.வி ஆனந்த போஸ், ஆளுநர் மாளிகையில் மின்விளக்குகளை அணைத்து  மெழுகுவத்தி ஏந்தி போராட்டத்தில் பங்கெடுத்தார். ஆளுநர் மாளிகை மற்றும் மாநிலத்தின் பெரும்பாலான நகர பகுதிகளில் மாநில அரசுக்கு எதிராகவும் பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு போராட்டம் தொடர்வது மம்தா தலைமையிலான அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day